தமிழகத்தை தீய சக்தி ஆள்கிறது.. திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக.. - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..

 
எடப்பாடி

நாம் தமிழர் கட்சியினர் நடத்திய பொதுக்கூட்டத்தில் , கொலைவெறித் தாக்குதல் நடத்திய திமுக-வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.  

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று மேடையில் ஏறிய திமுக மொரப்பூர் ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் உள்ளிட்டவர்கள்,  மேடையிலிருந்த மைக்கை பிடுங்கி தூர வீசி நாற்காலியை தூக்கி நாம் தமிழர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இதனையடுத்து பலரும் திமுக நிர்வாகிகளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள  எடப்பாடி பழனிசாமி, தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தியுள்ளார்.  

திமுக தாக்குதல்;

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது  ஒரு நூதனமான ஆட்சி தீய சக்திகளால்  நடத்தப்பட்டு வருகிறது என்பற்கு  பல்வேறு சம்பவங்களை  நான் சுட்டிக் கட்டி வருகிறேன். சமீபத்தில், தருமபுரி மாவட்டம் மொரப்பூரில் ஜனநாயக முறைப்படி நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். இதனை ஆளும் கட்சியினர் தடுக்காததும், அங்கிருந்த காவல்துறை கைகட்டி வேடிக்கை பர்த்ததும் ஜனநாயக படுகொலை என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக முறைப்படி செயல்பட அனுமதிக்கப்பட்டது.  ஆனால் எப்போதும் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரத்துக்கு தாங்கள் தான் குத்தகைக்காரர்கள் என தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கும் ஸ்டாலின்,  ஆட்சிக்கு வந்தவுடன் அவரது கட்சிக்காரர்கள் வன்முறை வெறியாட்டத்தை நடத்தி வருகிறார்கள்.  எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சமூக ஊடகங்களின் குரல் வளையை நெறிக்கிறார்கள்.

எடப்பாடி

தனக்கு கீழுள்ள காவல் துறையை , ஏவல் துறையாக மாற்றி திமுக, எதிர்க்கட்சிகள் மீது நடத்தும் ஜனநாயகப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன்.  எனவே இனியாவது விடியா அரசின் முதலமைச்சர் ,  தமிழ் நாட்டின் எதிர்க்கட்சிகள், சமூக செயற்பாட்டாளர்கள், மக்களின் நலன் விரும்பிகள், சமுக ஊடகங்கள் ஆகியவற்றை தடுக்கும் போக்கை கைவிட வேண்டும். இல்லையேல் அராஜகப் போக்கை எதிர்த்து பொதுமக்களே வீதியில் இறங்கி போராடும் நிலை உருவாகும். “என்று குறிப்பிட்டுள்ளார்.