பாஜகவை மீண்டும் புறக்கணைத்த எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், அக்கட்சியின் பெயர் சின்னம் ஆகியவற்றை அதிமுக பணிமனையிலும் பிரச்சாரத்திலும் அதிமுக தவிர்த்து வருகிறது. அதே போல் அதிமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்களிலும் பாஜகவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் வேட்பாளர்களை களம் இறக்கியதால், இரு அணிகளின் குழப்பத்தை தீர்க்க பாஜக சமாதானத்தில் இறங்கியது. அதே நேரத்தில் பொதுகுழு மூலம் ஒருமித்த வேட்பாளரை தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன்படி ஏற்கனவே அறிவித்த தென்னரசு.வை எடப்பாடி அணி வேட்பாளராக்கியது. பொது குழு கருத்து கேட்டதில் விதிமீறல் என ஓபிஎஸ் அணி தெரிவித்தாலும், தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக கூறியதால் இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு கிடைத்தது. இந்நிலையில் அதிமுக எடப்பாடி அணி வேட்பாளர் தென்னரசுவை ஆதரிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
ஈரோடு எடப்பாடி அணி அதிமுக தேர்தல் பணிமனையில், முதல்நாளிலேயே கூட்டணிக்கு பெயர் சூட்டுவதில் குழப்பம் ஏற்பட்டு அடுத்தடுத்து 3 முறை பேனர் மாற்றப்பட்டது. பாஜக ஆதரவளிப்பதாக கூறிய போதிலும் அதனை இதுவரை ஏற்காத மனநிலையிலேயே ஈரோடு அதிமுக எடப்பாடி அணி செயல்படுகிறது. தேர்தல் பணிமனையில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியோ சின்னமோ அக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களோ இடம் பெறவில்லை. அதேபோல் இன்று காலை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய தென்னரசு பாரதிய ஜனதா கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை் நண்பகல் வேட்பு மனு தாக்களுக்கும் பாஜகவினரை அழைக்காததால் அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
கூட்டணி கட்சியில் உள்ள தமாகவினருக்கு பிரச்சாரத்திற்கும் வேட்பு மனு தாக்களுக்கும் அழைப்பு விடுத்து அதிமுகவினர் உடன் அழைத்துச் சென்றனர். ஆனால் அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்வந்து அறிவித்த போதிலும் பாஜகவை அதிமுக புறக்கணித்து வருவது பாஜகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுகவினர், பாஜக அலுவலகத்திற்கு சென்று இன்று மாலை நடைபெறும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களின் ஆதரவுடன் பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறினர்.