"வெற்றி... வெற்றி... கொடுங்கோல் திமுக அரசுக்கு நல்ல பாடம்" - டாக்டர் சரவணன் சுளீர்!
பிரபல யூடியூபரான மாரிதாஸ் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பாஜக மற்றும் அதன் கூட்டணியில் இல்லாத கட்சிகளை விமர்சித்து வீடியோ வெளியிடுவார். ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பார். அந்த வகையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தையொட்டி ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்து சர்ச்சையானது. அதில், "திமுக ஆட்சியின் கீழ் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா. தேசத்திற்கு எந்த பெரிய துரோகத்தையும் செய்யக் கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்துக் கொள்ள இங்கே சுதந்திரம் இருக்கிறது.

ஆகவே இங்கே எந்த பெரிய சதி வேலை நடக்கவும் சாத்தியம் உண்டு. பிரிவினைவாத சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எதிர்ப்புகள் எழுந்ததும் உடனடியாக அந்தப் பதிவை அவர் நீக்கினார். ஆனால் மதுரை புதூர் காவல்நிலைய போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். ஆனால் இன்று மாரிதாஸ் மீதான ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது. ஆனாலும் அவர் டிசம்பர் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலேயே இருப்பார்.

ஏனென்றால் அவர் தேனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதே தனியார் ஊடகம் தொடர்பாக போலி மின்னஞ்சல் வழக்கில் கைதானார். அந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருப்பினும் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து பாஜக மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சூழலில் மாரிதாஸ் கைதை தடுத்தவரும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார்.

அப்போது பேசிய அவர், "தேசிய சிந்தனையாளர் மாரிதாஸ் மீது திமுக அரசு பொய் வழக்கு பதிவு செய்தது. காவல் துறையினர் அத்துமீறி அழைத்துச் சென்றனர். திமுக அரசு திட்டமிட்டு மாரிதாஸை கைது செய்து புனையப்பட்ட பொய் வழக்கை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பில் யூடியூப்பர்களுக்கும் கருத்து சுதந்திரம் உண்டு என கூறியுள்ளது. இந்த தீர்ப்பு திமுக கொடுங்கோல் அரசுக்கு பாடமாக அமைந்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்தபோதே மக்களுக்கு அராஜகம் நடக்கும் என அச்சம் வந்துவிட்டது, பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவின் பெயரில் மாரிதாஸ்க்கு ஆதரவாக நின்றோம். உயர் நீதிமன்ற வழக்கின் தீர்ப்பானது அனைத்து யூடிப்பர்ஸ்களுக்கும் இந்த வெற்றி சேரும். எங்கள் மீதான பொய் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்போம். பாஜகவிற்கு எதிராக கூட கருத்து சொல்லட்டும் ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லையுண்டு. அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம்” என்றார். இவர் ஏற்கெனவே திமுக எம்எல்ஏவாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


