கேரளா ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உறுப்பினர்களின் கருத்தியல் கொலைகளின் மையமாக மாறியுள்ளது.. பா.ஜ.க. குற்றச்சாட்டு
கேரளா ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. உறுப்பினர்களின் கருத்தியல் கொலைகளின் மையமாக மாறியுள்ளது என்று பா.ஜ.க.விஜன் மோர்ச்சா தேசிய தலைவர் டாக்டர் கே லட்சுமண் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழையை சேர்ந்தவர் கே.எஸ்.ஷான். எஸ்.டி.பி.ஐ. (இந்திய சமூக ஜனநாயக கட்சி) கட்சியின் மாநில செயலாளரான கே.எஸ்.ஷான் நேற்று முன்தினம் (கடந்த சனிக்கிழமை) மாலை தனது இருசக்கர வாகனத்தில் மன்னன்சேரி சந்திப்பு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அவரது வாகனத்தை பின்தொடர்ந்து காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தின் மீது காரை மோதி அவரை கீழே விழச் செய்தனர். கே.எஸ்.ஷான் சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் அவரை கொடூரமாக வெட்டி விட்டு தப்பியோடி விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் கே.எஸ்.ஷானை ஆலப்புழை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று காலையில் பா.ஜ.க.வின் ஒ.பி.சி. மோர்ச்சா மாநில செயலாளர் தலைவர் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற ஒரு கும்பல், ரஞ்சித் ஸ்ரீனிவாசனை சரமாரியாக வெட்டி விட்டு தப்போடியது. ஸ்ரீனிவாசன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாசன் உயிர் இழந்தார். பழிக்குபழியாக நடந்த இந்த கொலை சம்பவங்கள் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வின் ரஞ்சித் ஸ்ரீனிவாசன் கொலைக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க. மோர்ச்சா தேசிய தலைவர் டாக்டர் கே லட்சுமண் கூறியதாவது: சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணையை எவ்வாறு கையாளுகிறார்கள் மற்றும் பொதுவாக எங்கள் தலைவர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். கடந்த ஆண்டுகளில், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் கருத்தியல் கொள்கைகளின் மையமாக கேரளா மாறியுள்ளது. கேரள அரசு உடனடி விசாரணை மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.