ரத்த ஆறு ஓடும்னு சொன்னாங்க; ஆனா, ஒரு பூனைக்குட்டி கூட வெளியே வரல - திமுகவை விளாசும் சு.சாமி

 
ss

 ரத்த ஆறு ஓடும் என்று வீரமாக பேசினார்கள்.  ஆனால் ஒரு பூனை குட்டி கூட வெளியில் வரவில்லை என்று திமுகவை கடுமையாக விளாசி இருக்கிறார் சுப்பிரமணிய சாமி.  அவர் மேலும்,   திமுக ஒரு கட்சியோ இயக்கமோ இல்லை.  நாட்டை பிரிப்பதற்காக அதை துவங்கினார்கள் . ஊழலோ ஊழல் அக்கட்சி என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 பாஜக மூத்த தலைவர்  சுப்ரமணியசாமி.  சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவின் பங்கு குறித்த கேள்விக்கு,   ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்காக பாஜக ஏதும் செய்யவில்லை.  நான் ஏதாவது சொன்னால் கட்சிக்குள் தலையிடுகிறார் என்று சொல்வார்கள்.  

st

 நானும் பாஜக தான்.  ஆனால் தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுமைக்கும் உள்ள பாஜகவில் இருக்கிறேன்.   மற்ற மாநிலங்களில் இருப்பது போல தமிழகத்தில் பாஜக துடிப்புடன் இல்லை என்றார்.

 அவர் மேலும்,   தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் இருந்து பத்திரிகைகள் ,அறிக்கைகள் வாயிலாக தமிழகத்தில் பாஜகவை வளர்க்க முடியாது.  தேர்தல் நேரத்தில் அதிமுக , திமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்து அரசியல் செய்தால் தமிழகத்தில் பாஜக வளராது.   தமிழகத்தில் பாஜக வளர வேண்டும் என்றால் தனித்து நிற்க வேண்டும்.  அனைத்து தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும்.  அப்போதுதான் தமிழகத்தில் பாஜக வளரும் என்றார் .

திமுக குறித்த கேள்விக்கு,   திமுகவுக்கு கொள்கை கிடையாது.  நாட்டை பிரிப்பது குறித்து பேசிய படியே இருப்பார்கள் .  ஆனால் தேர்தலின் போது மட்டும் வேறு விதமாக பேசுவார்கள்.   என் முயற்சியால் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்கனவே நீக்கப்பட்டது .  அப்போது ரத்த ஆறு ஓடும் என்று வீரமாக பேசினார்கள்.  ஆனால் ஒரு பூனை குட்டி கூட வெளியே வரவில்லை.   அதனால் திமுக குறித்து யாரும் கவலைப்பட தேவையில்லை. 

 அது ஒரு கட்சியோ இயக்கமோ இல்லை.  நாட்டை பிரிப்பதற்காக அதை துவங்கினார்கள்.  தற்போது ஊழலோ ஊழல் அந்த கட்சி என்றவர்,  கோயில் விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு ,  கோவில் விவகாரத்தில் அநாகரிகமாக நடந்தால் நான் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.   இது தொடர்பாக ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறேன்.   தமிழகத்தில் இருக்கும் கோவில் பூசாரிகள் அச்சத்தில் இருக்கிறார்கள் . அவர்களுக்கு அதிகம் தொல்லை கொடுக்கிறார்கள்.  கோவில் பூசாரிகளை தேவையில்லாமல் தாக்கி பேசி கஷ்டம் கொடுக்கின்றார்கள்.   நாட்டில் 80% பேர் இந்துக்கள் உள்ளனர்.  அதனால் இந்த கலை இவர்கள் யாரும் எதுவும் செய்து விட முடியாது என்றார் உறுதியுடன்.