"தமிழை சிறுமைப்படுத்திய நாகசாமிக்கு அரசு மரியாதையா?" - விசிக ரவிக்குமார் மீது சீறிய உபிக்கள்!

 
ரவிக்குமார் எம்பி

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கும் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கும் இருக்கும் நெருக்கம் ஊரறிந்தது. உலகறிந்தது. இணையத்தில் திமுகவினரும் விசிகவினரும் அடித்துக் கொண்டாலும் இவர்கள் அதனை கண்டுகொள்ளாமல் தங்களுக்கு இடையே நட்பு பாராட்டிக் கொள்வார்கள். இதன் காரணமாக திருமாவளவனை திமுகவினர் அவ்வளவாக விமர்சிப்பதில்லை. ஆனால் விசிக பொதுச்செயலாளரான ரவிக்குமாருக்கும் திமுகவினருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். அதற்குக் காரணம் திமுகவையும் அதன் தாய் கழக தலைவர் பெரியாரையும் மறைமுகமாக சாடி பதிவிடுவார்.

ரவிக்குமார் எம்பி

இதற்கு உடன்பிறப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பலை எழும். அந்த வகையில் தற்போது கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமியின் மறைவுக்கு ரவிக்குமார் எழுதிய இரங்கல் பதிவு தான் அனலை கூட்டியுள்ளது. அவர் தனது பதிவில், "தமிழ்நாடு அரசின் பெருந்தன்மையை உணர்த்தும் விதமாக கல்வெட்டியல் அறிஞர் இரா.நாகசாமி அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முன்வரவேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். இதில் என்ன இருக்கிறது?  இதற்கு ஏன் உடன்பிறப்புகள் கொதிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். 

அதற்கு கடந்த கால வரலாறையும் நாகசாமி பின்னால் சுற்றிய சர்ச்சைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். நாகசாமி சமஸ்கிருத வித்துவான் ராமச்சந்திரனுக்கு மகனாகப் பிறந்தவர். இதன் காரணமாகவே சமஸ்கிருத கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் பார்த்தவர் நாகசாமி. தொன்மையான தனிச்சிறப்பு கொண்ட தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தான் பிறந்தது என்று சொன்னவர் தான் இந்த நாகசாமி. அது மட்டுமில்லாமல் திருக்குறள் சமஸ்கிருத வேதத்தின் சாரம் என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். இதனால் மத்திய அரசின் செம்மொழி அறிஞர் விருதுக்கான தேர்வுக்குழுவில் இவர் சேர்க்கப்பட்ட போது பல்வேறு தரப்பினரும் எதிர்த்தார்கள்.

முதல்வர் ஸ்டாலினை இழிவுபடுத்தியவர்

அவர்களில் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலினும் ஒருவர். இதற்கு பதிலடி கொடுத்த நாகசாமி வெளியிட்ட அறிக்கையின் இறுதியில், "ஸ்டாலினுக்கு இதை விடக் கேவலம் வேறு எதுவும் இல்லை. ஆனால் மானம் மரியாதை வெட்கம் இதையெல்லாம் துறந்ததால்தான் இப்போது கட்சியின் தலைவர் ஆகியிருக்கிறார்! வாய்புளித்தது; மாங்காய் புளித்தது. மண்டபத்தில் எவனோ எழுதிக் கொடுத்ததைப் பகிர்ந்து, மடையனும் ஆகிவிட்டாயிற்று! சாதாரண மடையன் அல்ல. மாங்காயுடன் சேர்ந்து" என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஒரு திமுக அனுதாபி ரவிக்குமாரின் பதிவிற்கு கீழ் கமெண்ட் செய்திருக்கிறார். 

பத்மபூஷண் விருது பெற்ற 'நாகசாமி' திருக்குறளை இழிவுபடுத்தி நூல் வெளியீடு-  தமிழறிஞர்கள் கொந்தளிப்பு | A controversy erupt over Nagaswamy's Book on  Thirukkural - Tamil ...

முதலமைச்சரை அன்றைய எதிர்க்கட்சி தலைவரை இவ்வளவு இழிவாக விமர்சித்த ஒருவருக்கு, தமிழை சிறுமைப்படுத்தி ஒருசிலர் மட்டுமே பேசக்கூடிய சமஸ்கிருதத்தை பெருமைப்படுத்தும் ஒருவருக்கு எப்படி அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என தமிழ் அறிஞர்களும் திமுக அனுதாபிகளும் கேள்வியெழுப்பி வருகின்றனர். திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில செயலாளர் உமாபதி, "அரசு மரியாதையை அவமதிக்க வேண்டாம். நாகசாமிக்கு அரசு மரியாதை செய்தால் அவரது தமிழர் விரோத அந்தங்கெட்ட ஆய்வுகளை அங்கீகரிப்பதாகிவிடும். நாகசாமிக்கு இரங்கல் தெரிவித்தால் தவறில்லை. அரசு மரியாதை கேட்பது அபத்தம்” என பதிவிட்டுள்ளார்.