ரூ.500,00,00,000 கேட்கும் திமுக! என்ன செய்யப்போகிறார் அண்ணாமலை?

 
sa

திமுக பைல்ஸ் என்கிற தலைப்பில் திமுகவின் தலைவரும் தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின்,  அவரது மருமகன் சபரீசன்,  அவரது சகோதரியும் திமுக எம்பியுமான கனிமொழி உள்ளிட்ட திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு இருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .  இதற்காக 48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் . அப்படி மன்னிப்பு கேட்க தவறினால் 500 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் .எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் எம். பி. அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

ar

 அண்ணாமலைக்கு அனுப்பப்பட்டிருக்கும் அந்த நோட்டீஸில்,    திமுக பைல்ஸ் என்கிற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் திமுக கட்சி மீது பல தவறான ,ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளை நீங்கள் கூறியிருந்தீர்கள் .  திமுகவின் சில சொத்துக்களின் மதிப்பை உயர்த்தி தொடர்பில்லாத சொத்துக்கள் உள்ளிட்ட அவற்றின் மூலம் திமுக கட்சிக்கு மொத்தம் ரூ. 1,408,94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது . வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.  சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அத்துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். 

 திமுகவினருக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,474,18 கோடி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மதிப்பு ரூ.34,184,71 கோடி என்பது பொய்யானது.  ஒருவர் திமுகவின் உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தால் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

rs

 ஒரு தனி நபரின் சொத்துக்களுக்கும் அரசியல் கட்சியின் சொத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த கொள்கையை விளக்குவதற்கு ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்புகிறோம்.  உங்களிடம் 34 ஆடுகள் இருப்பதாக அடிக்கடி கூறுவதால் இந்த  34 ஆடுகள் பாஜகவின் சொத்தாக மாறுமா? உங்கள் ரபேல் கைக்கடிக்காரம் பாஜகவின் சொத்தாக மாறுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

 அந்த வீடியோவில் மக்களுடைய பணத்தை ஒப்பற்ற அளவில் திமுக கொள்ளை அடித்துள்ளது என்றும்,  அது ராபர்ட் கிளைவை விட அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டிருக்கிறது.  அத்தகைய கருத்துக்கள் ஆதாரமற்றவை.  திமுக கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது , திமுகவின் இரண்டு கோடி உறுப்பினர்களில் ஒவ்வொருவரின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்கு சமம்.   இதனால் அமைப்புச் செயலாளர்கள் என்ற முறையில் உங்கள் மீது அவதூருக்காக தகுந்த வழக்கு தொடர உரிமை உண்டு .

sa

திமுக மற்றும் அதன் தலைவர் மு. க. ஸ்டாலின் சார்பாக சொல்லிக் கொள்வது என்னவென்றால்,  உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.  உங்கள் சமூக ஊடக பக்கங்கள் , இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவினை நீக்க வேண்டும்.  இழப்பீடு தொகையாக கட்சிக்காரருக்கு ரூ.500,00,00,000 வழங்க வேண்டும்.  எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார். 

 இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்திற்குள் இவற்றை செய்ய தவறினால் உங்களுக்கு எதிராக பொருத்தமான சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடங்குவதற்கு எங்கள் கட்சிக்காரர் முன்வருவார் என்று கூறப்பட்டிருக்கிறது.  திமுக அனுப்பி இருக்கும் இந்த நோட்டீஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் அண்ணாமலை? என்கிற கேள்வி,  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.