“ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்”- திண்டுக்கல் சீனிவாசன்

 
திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகம் முழுவதும் இன்று அதிமுக சார்பில் காய்கறி மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திண்டுக்கல் மாவட்ட அதிமுக  சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வரும் காய்கறி விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். மேலும் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது, அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு இடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஸ்டாலினுக்கு அரசியல் ஆண்மை இருக்குமானால் மீண்டும் தேர்தல் நடத்தட்டும், அப்போது 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்க வைத்து ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதல்வர் ஆக்குவோம்” என்றார். இதனை கேட்டு மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், சுதாரித்துக்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன். “ஐயோ வார்த்தை தப்பா வந்திருச்சி, ஸ்டாலினை தோற்கடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கி காட்டுவோம்” என திருத்தி பேசினார்.