சோனியா காந்தியின் காலம் முடிந்தது... மம்தா பானர்ஜி தலைவராக விரும்புகிறார்.. திலிப் கோஷ் கருத்து

 
சோனியா காந்தி

எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தலைவராக மம்தா பானர்ஜி விரும்புகிறார், சோனியா காந்தியின் காலம் (தலைமை ஏற்கும்) முடிந்து  விட்டது என்று பா.ஜ.க.வின் திலிப் கோஷ் தெரிவித்தார்.

பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று அரசியல் கட்சிகள்  பேசி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். எதிர்க்கட்சிகள் ஒரே அணியாக திரள தயாராக உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிக்கு யார் தலைமை தாங்குவது என்பதில் அவர்களுக்கு இடையே பிரச்சினை உள்ளது.

மம்தா பானர்ஜி

நாட்டின் பாரம்பரியமான காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் செயல்பட வேண்டும் என்று கூறுகிறது. அதேசமயம் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரு அணியாக உருவாக வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறுகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பனிப்போர் நிலவுவது தெரிகிறது. திரிணாமுல் காங்கிரஸ் நாடு முழுவதும் விரிவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இரு கட்சிகளும் வெளிப்படையான மோதலை தவிர்க்கின்றன. ஆனால்  இரு கட்சிகளுக்கும் இடையிலான விரிசல் அவர்களின் நடவடிக்கைகளில் காணப்படுகிறது.

திலிப் கோஷ்

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் இடையிலான பனிப்போர் குறித்து பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவர் திலிப் கோஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த நாடகங்கள் மிகவும் பழமையானவை. ஒவ்வொரு கட்சியும் (எதிா்கட்சிகளின் கூட்டணி) தலைவராக வேண்டும் என்று விரும்புகிறது. மம்தா பானர்ஜி தலைவராக இருக்க விரும்புகிறார். இப்போது சோனியா காந்தியின் காலம் முடிந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.