பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டத்தை மாற்றுவாங்க, இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவாங்க.. காங்கிரஸ்
2024ல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதலில் அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் எச்சரிக்கை செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசின் தவறான பொருளாதார நிர்வாகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில், கடந்த நவம்பர் 14ம் தேதி முதல் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் விழிப்புணர்வு போராட்டத்தை நடத்தி வருகிறது. மத்திய பிரதேசம் போபாலில் காங்கிரஸார் நேற்று நடத்திய பொதுமக்கள் விழிப்புணர்வு போராட்டத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் திக்விஜய சிங் பேசுகையில் கூறியதாவது: இந்துத்துவாவுக்கும், இந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வீர் சாவர்க்கர் தனது புத்தகத்தில், இந்து மதத்துக்கும், இந்துத்துவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும், வீர் சாவர்க்கர் ஒரு போதும் பசுவை மாதாவாக கருதவில்லை, மாட்டிறைச்சி சாப்பிடுவதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
நமது போராட்டம் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துடன் உள்ளது. 2024ல் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், முதலில் அரசியல் சட்டத்தை மாற்றுவார்கள். இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.