ஆர்.பி.என். சிங் பா.ஜ.க.வுக்கு தாவியது ஏன்?.. திக்விஜய சிங் புது தகவல்

 
திக்விஜய் சிங்

அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது என்பதால் ஆர்.பி.என். சிங் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

ஆர்.பி.என். சிங் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்ததை பழங்குடியின முற்போக்கு பிராந்திய கூட்டணியின் பிரத்யோத் மாணிக்யா விமர்சனம் செய்து இருந்தார். பிரத்யோத் மாணிக்யா டிவிட்டரில், ஒரு கட்சியை விட்டு வெளியேறுவது ஒரு விஷயம், ஆனால் சித்தாந்தத்தின் அடிப்படையில் அலைவரிசைக்கு நேர்மாறான மற்றொரு கட்சியில் சேருவது வேறு. கடவுளுக்கு நன்றி, தேசத்துக்கு சேவை செய்வதற்கும், பாசாங்குத்தனத்திற்கும் உள்ள வித்தியாசம் எனக்கு தெரியும் என்று பதிவு செய்து இருந்தார்.

ஆர்.பி.என். சிங், தர்மேந்திர பிரதான்

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங், ஆர்.பி.என். சிங் பா.ஜ.க.வில் இணைந்தது தொடர்பாக டிவிட்டரில், பிரத்யோத் மாணிக்யாவின் கருத்துடன் நான் உடன்படுகிறேன். இரண்டு வகையான காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவர் அதன் சித்தாந்தத்தை நம்புபவர். மற்றவர் அதிகாரம் இல்லாமல் இருக்க முடியாது என்று பதிவு செய்து இருந்தார்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவரும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவருமான ரத்தன்ஜித்  பிரதாப் நரேன் (ஆர்.பி.என்.) சிங் கடந்த செவ்வாய்கிழமையன்று காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் முன்பு போல் இல்லை என்று குற்றம் சாட்டினார். ஆர்.பி.என். சிங் விலகல் காங்கிரஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆர்.பி.என். சிங்கை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.