தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் -ஓபிஎஸ் மகன் போட்ட சபதம்!

 
o

அதிமுகவில் பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றார்கள்.  தொடரும் இந்த மோதலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்துவிட்டதால் இருதரப்பிலும் தனித்தனியாக வேட்பாளர்கள் அறிவித்திருந்தார்கள்.   தென்னரசு போட்டியிடுவதாக பழனிச்சாமி அறிவித்திருந்தார் .  செந்தில் முருகன் போட்டியிடுவதாக பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார் . இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.

j

 இதை முன்னிட்டு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக அதிமுக பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.   இது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவை தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 2646 பேருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.  தென்னரசுவிற்கு பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது.  பொதுக்குழு உறுப்பினர்கள் 92 சதவிகிதம் பேர் அதாவது 2051 வாக்குகள் தென்னரசுவிற்கு ஆதரவாக கிடைத்திருக்கிறது.  இந்த ஒப்புதல் கடிதம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.  அதன்பின்னர் இரட்டை இலை சின்னம் பழனிச்சாமி வேட்பாளருக்கு வழங்கப்பட்டது.

 இதற்கிடையில் ஓபிஎஸ் தரப்பின் வேட்பாளர் செந்தில் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

j

இந்த நிலையில், ஓபிஎஸ் மகன் விப ஜெயபிரதீப் தனது வலைத்தள பக்கத்தில், தலைவன்(உலகநீதி)  என்ற தலைப்பில்,

’’தனது வாழ்க்கையை சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு தர்மத்தின் வழியில் எண்ணம்- சொல் -செயல் இம்மூன்றையும் ஒரே நேர்கோட்டில் செயல்படுத்துபவர் தான் உண்மையான தலைவர். 

அப்படி தர்மத்தின் வழியில் செயல்படும் தலைவர் செயல்கள் ஒரு சில மனிதர்களுக்கு தற்காலிகமாக கசப்பு மருந்து போல் தெரியலாம்.  ஆனால் அதுதான் நிரந்தர சஞ்சீவினி மருந்தாக இருக்கும் என்பதே உண்மை. 

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருவர்தான் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முழுமையாக அறிந்து அவருடைய திறமையை விசுவாசத்தை உழைப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர். 

அப்படிப்பட்ட நீதி தேவதை தற்போது  இல்லையே என்பதை நினைக்கும் போது மனம் கலங்குகிறது. தர்மத்திற்கு சோதனை வரலாம்.  ஆனால் வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை.  தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை எங்களது முயற்சிகள் தொடரும்.....
கழக உண்மை தொண்டன்
வி ப ஜெயபிரதீப்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.