மும்பையில் பா.ஜ.க. மாநகராட்சி உறுப்பினர் இருந்த காலத்தில் சிவ சேனா பிறக்கவில்லை.. பட்னாவிஸ் பதிலடி

 
சிவ சேனா வளையல்கள் அணிந்து இருக்கலாம்…. ஆனால் நாங்கள் இல்லை…. தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி….

மும்பையில் பா.ஜ.க. மாநகராட்சி உறுப்பினர் இருந்த காலத்தில் சிவ சேனா கட்சி பிறக்கவில்லை என்று உத்தவ் தாக்கரேவுக்கு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

சிவ சேனா கட்சி தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், நாம் அவர்களுக்கு (பா.ஜ.க.) ஆதரவளித்தவர்கள். நாம் 25 ஆண்டுகளாக கூட்டணி வைத்திருந்தோம். பா.ஜ.க. இந்துத்துவாவை அதிகாரத்திற்காக பயன்படுத்தியது. நாம் பா.ஜ.க.வை விட்டு வெளியேறினோம். ஆனால் இந்துத்துவாவை விட்டு வெளியேற மாட்டோம். பா.ஜ.க. இந்துத்துவா அல்ல. நாங்கள் அவர்கைள சவால் செய்த போது எங்களுக்கு எதிராக தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்று சரமாரியாக பா.ஜ.க. மீது குற்றம் சாட்டினார்.

சிவ சேனா

உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது: ராமர் கோயில் இயக்கத்தின் போது நீங்கள் (உத்தவ் தாக்கரே) உரைகளை (பேச்சு) மட்டுமே வழங்கினீர்கள். நாங்கள் (பா.ஜ.க.) தோட்டாக்கள் மற்றும் தடியடிகளை எதிர்கொண்டவர்கள். மும்பையில் பா.ஜ.க. கார்ப்பரேட்டர் (மாநகராட்சி உறுப்பினர்) இருந்த காலத்தில் அவர்களின் கட்சி (சிவ சேனா) பிறக்கவில்லை என்பதை அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 

ராவ் சாகேப் தன்வே

அவர்கள் எங்களுடன் இருந்த காலம் வரை, அவர்கள் நம்பர் 1 அல்லது இல்லை 2 கட்சியாக இருந்தனர். ஆனால் இப்போது அவர்கள் 4வது இடத்தில் இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் ராவ்சாகேப் பாட்டீல் தன்வே கூறுகையில், இன்று உத்தவ் தாக்கரே, பாலா சாஹேப் போதித்ததற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறார். அதிகார பேராசையில் இந்துத்துவா எதிர்ப்பு கட்சிகளில் சேர்ந்தார் என்று தெரிவித்தார்.