ஆதித்யா தாக்கரே முதிர்ச்சியற்றவர், அவர் எம்.எல்.ஏ.ஆனது மிகவும் எளிதாக இருந்தது.. ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவ சேனா பதிலடி

 
தீபக் கேசர்கர்

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட சவால் விடுத்த ஆதித்யா தாக்கரேவுக்கு, அவர் முதிர்ச்சியற்றவர், அவர் எம்.எல்.ஏ. ஆனது மிகவும் எளிதாக இருந்தது என்று ஆதித்யா தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவ சேனா பதிலடி கொடுத்துள்ளது.

வோர்லி சட்டப்பேரவை தொகுதியில் தன்னை எதிர்த்து தேர்தலில் போட்டியிட வருமாறு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்க சவால் விடுத்த ஆதித்யா தாக்கரேவுக்கு ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவ சேனாவின் எம்.எல்.ஏ.வும், மகாராஷ்டிரா அமைச்சருமான தீபக் கேசர்கர் பதிலடி கொடுத்துள்ளார். தீபக் கேசர்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட முதிர்ச்சியற்றவர் ஆதித்யா தாக்கரே. அவர் எம்.எல்.ஏ. ஆனது மிகவும் எளிதாக இருந்தது. ஆதித்யா தாக்கரே வோர்லி சட்டப்பேரவை தொகுதியில் வெற்றி பெற, இரண்டு மேலவை உறுப்பினா்கள் அவருக்காக கடுமையாக உழைத்தார்கள். 

ஆதித்யா தாக்கரே

நீங்கள் வோர்லி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டையான தானேயில் நீங்கள் தேர்தலில் போட்டியிட்டால், நீங்கள் டெபாசிட் இழப்பீர்கள் என்றும் நாங்களும் சொல்லலாம். ஆனால் இது போன்ற அறிக்கைகளை வெளியிட நாங்கள் விரும்பவில்லை, மகாராஷ்டிராவுக்காக பணியாற்றுவதே எங்கள் கவனம். உண்மையில், இது போன்ற அறிக்கைகளுக்கு  பதிலளிக்க கூட முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு  நேரம் இல்லை. அவர் கடுமையாக உழைத்து, மகாராஷ்டிராவுக்கு சேவை செய்வதில் மும்முரமாக இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏக்நாத் ஷிண்டே
ஆதித்யா தாக்கரே கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான முதல்வருக்கு ( ஏக்நாத் ஷிண்டே) என்னை எதிர்த்து சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட நான் சவால் விடுத்துள்ளேன். நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் என்னை எதிர்த்து வோர்லி தொகுதியில் போட்டியிடட்டும். நான் அவர்களுக்கு ஒரு சவாலை உங்கள் முன் வைக்கிறேன் என தெரிவித்து இருந்தார்.