கொரோனா பரவலுக்கு மத்தியில் கேரளாவில் திருவாதிரை விழாவை கொண்டாடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்..

 
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்

கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் வேளையில், கோவிட் நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  திருவாதிரை விழாவை நடத்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கேரளாவில் கொரேனா வைரஸ் பரவல் தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மட்டும் அந்த மாநிலத்தில் புதிதாக 9,066 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை எடுத்து வருகிறது. திருமணம் மற்றும் இறுதி சடங்களுகளில் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

இந்த சூழ்நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சியினர் பெரிய நிகழ்ச்சியை நடத்தியது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பாரசலாவில்  திருவாதிரை நிகழ்ச்சியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறப்பாக கொண்டாடினர். கோவிட் கட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில், திருவாதிரை விழாவில் சுமார் 550 பேர் பங்கேற்றனர். இதில் சில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் அடங்குவர்.

கோவிட் கட்டுப்பாடுகள்

 பாரசலா  பகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கூறுகையில், கோவிட்-19 நெறிமுறைகளுக்கு உட்பட்டு திருவாதிரையை நடத்துமாறு தொண்டர்களிடம் அறிவுறுத்தினேன். இருப்பினும், இந்த நிகழ்வு சமூகத்தில் இருந்து விமர்சனத்திற்கு உள்ளானது என்று தெரிவித்தார். கோவிட் நெறிமுறைகளை ஆளும் கட்சியினரே கடைப்பிடிக்காததை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்தனர்.