"கோட்சேவ பத்தி பேச கூடாது".. மைக்கை புடுங்கிய கோவை போலீஸ்.. "ஆர்எஸ்எஸ் ஆட்சியா?" - கொதிக்கும் நெட்டிசன்கள்!
இன்று இந்தியாவின் தேசதந்தை மகாத்மா காந்தியின் 75ஆவது நினைவு தினம். இந்த நினைவு தினம் எப்போதுமே துயரம் அளிக்கக் கூடியது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அஹிம்சை வழியில் பயணித்த ஒரு மகான் மதத்தின் பெயரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. காந்தியின் நினைவுதினத்தை அனுசரிப்பதை விட இந்துத்துவ பயங்கரவாதத்தை நாம் நினைவுகூர வேண்டும். காலத்தின் கட்டாயம் அது. முன்பை விட நாட்டில் மதத்தின் பெயரால் நடக்கும் அராஜகங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
அதைத் தான் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு வழிகளில் இன்று உணர்த்தியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதியுள்ள அவர், அமைதியான தமிழ்நாட்டில் மதவெறியை விதைத்து கலவரத்தை தூண்டிவிட்டு பாஜக குளிர்காய நினைப்பதாகவும், அக்கட்சியின் அரசியலை அம்பலப்படுத்துங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேபோல அரசு சார்பில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என்.ரவியும் கலந்துகொண்டனர். இதுதொடர்பாக ட்வீட்டும் செய்திருக்கிறார் முதலமைச்சர்.
அந்த ட்வீட்டில், "மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்” என்று கூறியிருக்கிறார். இதில் கோட்சேவின் வாரிசுகள் என ஆர்எஸ்எஸ் அமைப்பையும் பாஜகவையும் மறைமுகமாக சாடியிருக்கிறார். விஷயம் இப்படியிருக்க கோவையில் அரங்கேறியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில், அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்! pic.twitter.com/V9uojM8N5z
— M.K.Stalin (@mkstalin) January 30, 2022
அதுவும் முதலமைச்சர் கீழ் செயல்படும் காவல் துறையே இவ்வாறு செயல்பட்டிருப்பது தான் அந்த அதிர்ச்சிக்கு காரணம். காந்தியடிகளை ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே சுட்டுக் கொன்ற இந்த நாளை "மதவெறிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட உறுதி ஏற்போம்" என்ற தலைப்பின் அடிப்படையில் கோவையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதச்சார்பில்லாத முற்போக்கு சக்திகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
ஜி.ராமகிருஷ்ணன் உறுதி மொழி வாசிக்க மற்றவர்கள் உறுதியேற்றனர். அவர், "சாதி மத வெறுப்பு அரசியலை விதைத்து மக்களிடையே மதவெறியை உருவாக்கிட துணியும் கோட்சேவின் வாரிசுகளால், ஆர்எஸ்எஸ் பயங்கரவாதிகளால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்” என்றார். அப்போது அங்கு வந்த போலீஸ் அதிகாரிகள் ஜி.ராமகிருஷ்ணனை தடுத்தார்கள். ஆர்எஸ்எஸ் குறித்தும் கோட்சே குறித்தும் ஏன் பேசுகிறீர்கள் எனக்கூறி மைக்கை பிடுங்க முற்பட்டார்கள். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோட்சேவின் வாரிசுகள் என முதலமைச்சர் ஸ்டாலினும் தான் சொல்லியிருக்கிறார்.
அவரை கேள்வி கேட்க இந்த போலீஸ் அதிகாரிகளுக்கு துணிவிருக்கிறதா என கேள்வியெழுப்பி வருகின்றனர். மேலும் கோவையில் இவ்வாறு நடப்பது முதன்முறை அல்ல. ஏற்கெனவே பெரியார் சிலை அவமதித்தவர்களைக் கைதுசெய்யக் கோரி திக உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. ஆனால் பெரியார் சிலையை அவமதித்த இந்துத்துவ ஆதரவாளர்களைக் கைதுசெய்யாமல் பெரியார் அமைப்பினரை கோவை காவல் துறை கைது செய்தது. கோவை காவல் துறை ஆர்எஸ்எஸ் கையில் இருக்கிறதா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கையில் இருக்கிறதா என கேள்வி எழுந்துள்ளது.