மீண்டும் உருவாகும் கொரோனா அலை.. அரசியல் கூட்டங்களுக்கு தடை போடுங்க... தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம்.

 
காங்கிரஸ்

கொரோனா வைரஸின் 3வது அலை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், பெரிய கூட்டங்களுக்கு தடை போடுங்க என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.

நம் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசியல் கட்சிகள் நடத்தி வரும் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் மற்றும் விவாதங்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவை காரணம் காட்டி, உத்தர பிரதேசத்தில் அனைத்து கட்சிகளின் கூட்டங்களை ரத்து செய்ய உத்தரவிடுங்கள் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவுக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

சுஷில் சந்திரா

மேலும், காங்கிரஸ் கமிட்டி அந்த கடிதத்தில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அரசு பணத்தில் நடைபெறும் தொடக்க விழாக்களில்  அரசியல் அறிக்கைகளை வெளியிடுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.

கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், உத்தர பிரதேசம் மற்றும் தேர்தல் நடைபெற உள்ள பிற மாநிலங்களில் முக்கிய கூட்டங்களை ஒத்திவைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. தங்கள் மாநிலங்களில் கோவிட்-19 நிலைமையை மதிப்பீடு செய்து கூட்டங்களை நடத்துவது குறித்து முடிவெடுக்குமாறு மாநில பிரிவுகளை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.