எரிபொருள் விலை உயர்வை கண்டித்து மார்ச் 31ம் தேதி கியாஸ் சிலிண்டருக்கு மாலை, டிரம்ஸ் அடித்து போராட்டம்.. காங்கிரஸ்

 
காங்கிரஸ்

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலும் மார்ச் 31ம் தேதியன்று  சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், டிரம்ஸ் அடித்தும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நம் நாட்டில் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தி வருகின்றன. நேற்று வரையிலான கடந்த 5 தினங்களில் 4 முறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

பெட்ரோல் பம்ப்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியதன் மூலம் பா.ஜ.க. அரசு 8 ஆண்டுகளில் ரூ.26 லட்சம் கோடியை சம்பாதித்துள்ளது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மார்ச் 31ம் தேதி முதல் ஏப்ரல் 7 வரை அன்பில்லாத இந்தியா பிரச்சாரம் என்ற  3 கட்ட போராட்டத்தை அறிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷாமா முகமது டிவிட்டரில், இந்த வாரத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.20 உயர்ந்துள்ளது. தேர்தலுக்கு முன் 4 மாதங்கள் எரிபொருள் விலை மாறாமல் இருந்தது. இப்போது ஒரு வாரத்தில் நான்கு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வெட்கமற்ற கொள்ளையை நிறுத்த வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியாகாந்தி விலகி விட்டாரா? ரன்தீப் சிங் சுர்ஜேவாலா பதில்

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது: பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்கள் விலையில் ஈடுகட்ட முடியாத  விலை உயர்வுக்கு எதிராக காது கேளாத பா.ஜ.க. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மார்ச் 31ம் தேதியன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே மற்றும் பொது இடங்களில் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், டிரம்ஸ் அடித்தும் மற்றும் இதர கருவிகளை பயன்படுத்தியும் போராட்டம் நடத்துவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.