சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாகத்தான் ஜவுளி மீதான வரி உயர்வு ஒத்திவைப்பு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
ஆயத்த ஆடைகள்

சட்டப்பேரவை தேர்தல் காரணமாகத்தான் ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், பருத்தி வகைகள் தவிர, ஆயத்த ஆடைகள் உள்பட அனைத்து வகையான ஜவுளிகளுக்கான 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) 12 சதவீதமாக உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. 2022 ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரியை உயர்த்துவதை நிறுத்தி வைக்குமாறு சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து ஜவுளி மீதான சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை ஜி.எஸ்.டி.கவுன்சில் நிறுத்தி வைத்தது.

ஜி.எஸ்.டி.

ஆனால் சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாகத்தான் ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. உயர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண தொடங்கிய பிறகு ஜவுளி மீதான ஜி.எஸ்.டி உயர்த்தப்படும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆடைகள், ஆயத்த ஆடைகளுக்கான 5 சதவீத ஜி.எஸ்.டி. 12 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு நமது மாநில நிதி அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பிப்ரவரி 28ம் தேதி வரை முடிவு (ஜி.எஸ்.டி. உயர்வு) ஒத்திவைக்கப்பட்டது. 

கவுரவ் வல்லப் (நடுவில்)

அது (வரி உயர்வு ஒத்திவைப்பு முடிவு) சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் வரை மட்டுமே. காலணிகளுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு ரூ.1,000க்கும் குறைவான காலணிகளுக்கும் பொருந்தும். எண்ணெய், சோப்பு மற்றும் ஷாம்பு உள்ளிட்ட மூன்றாவது வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களின் விலை 10 சதவீதம் உயரும். அனைத்து நிறுவனங்களும் விலை உயர்த்துகின்றன, ஆனால் மத்திய அரசு வாய்மூடி பார்வையாளராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.