பாஜகவுக்கு பக்கா ஸ்கெட்ச்; தரமான வேட்பாளர்கள்... சொன்னதை செய்த பிரியங்கா - யோகிக்கு நெருக்கடி!
தேர்தல் தேதி வெளியானதிலிருந்து உத்தரப் பிரதேச அரசியல் களத்தில் நொடிக்கு நொடி அதிரடி சரவெடியாக சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பாஜகவிலிருந்து ஒவ்வொருவராக உருவிக் கொண்டிருக்கிறார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். இதுவரை இரண்டு அமைச்சர்கள், நான்கு எம்எல்ஏக்களை என ஆறு முக்கிய தலைவர்களை வளைத்து போட்டுள்ளார். எப்போதுமே பாஜக தான் இந்த அஸ்திரத்தை கையிலெடுக்கும். ஆனால் அவன் பொருள வச்சே அவன போடுவோம் என அகிலேஷ் யாதவ் பாஜகவின் அஸ்திரத்தை உபயோகித்து வருகிறார். இதனால் உபி அரசியல் களம் தகித்து கொண்டிருக்கிறது.
இது ஒருபுறம் என்றால் மகாராஷ்டிராவில் சிவசேனாவை பாஜகவை தூக்கியெறிய வைத்த தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார் அகிலேஷ் உடன் கூட்டு சேர்ந்துள்ளார். பாஜகவுக்கு அடி மேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. மற்றொரு புறம் தனித்து போட்டியிடுவதாக மாயாவதி அறிவிக்க, தலித் மக்களின் வாக்குகளும் பிரிய போகின்றன. காங்கிரஸ் சார்பில் பொதுச் செயலாளரும் உபி மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி காலில் பம்பரத்தைக் கட்டி தேர்தல் பணிகளைச் செய்து வருகிறார். ஆட்சியை தக்கவைக்க பாஜக பெரும்பாடு பட்டு கொண்டிருக்கிறது.
இச்சூழலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ளார். மொத்தம் 125 பேர் கொண்ட அந்த வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக 2017ஆம் ஆண்டு பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரால் வன்கொடுமை செய்யப்பட்ட உன்னாவ் சிறுமியின் தாய் ஆஷா சிங்கும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் உன்னாவ் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். இது பாஜகவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. உன்னாவ் அலையை மாநிலம் எங்கும் எடுத்துச் செல்வதற்கான முதல் அடியாக வேட்பாளரை நியமித்துள்ளது காங்கிரஸ்.
இதேபோல் உம்பா கிராமத்தில் நிலம் தொடர்பான கோண்ட் பழங்குடியினரின் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த ராம்ராஜ் கோண்ட் என்பவரும், முதல்வர் யோகியை சந்திக்க முயன்றபோது காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட சுகாதாரத்துறை ஊழியர் பூனம் பாண்டே என்பவரும் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். CAA எதிர்ப்பு போராட்டத்தால் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சதாப் ஜாபர் வேட்பாளராகியுள்ளார். 40 சதவீத சீட்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்திருந்தார். அதன்படி, மொத்தமுள்ள 125 வேட்பாளர்களில் 40 சதவீதம் பேர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சொன்னதை நிறைவேற்றி காட்டியுள்ளார்.