அண்ணாமலை: தமிழ்நாட்டுக்கே அவமானம்- ஜோதிமணி
காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், பாஜக அரசு பழிவாங்கும் போக்கை கண்டித்தும், அவரது வீடு பறிக்கப்பட்டதை கண்டித்தும், கரூர் மக்களவை தொகுதியில் ஒரு லட்சம் வீடுகளில் ‘எனது வீடு ராகுல் வீடு‘ என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்திவிட்டு, கன்னட கீதத்தை ஒலிக்கச் செய்கிறார். ஒரு தமிழராக அண்ணாமலை அதைக் கண்டும் காணாமல் இருக்கிறார். கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாதியில் நிறுத்தியதற்கு கேள்வி எழுப்பினால் பாட்டின் மெட்டு சரியில்லை எனக் கூறும் அண்ணாமலை தன்னை தமிழர் எனக் கூறுவது தமிழ்நாட்டுக்கு அவமானம். கர்நாடகாஇவ்ல் 150 இடங்களை காங்கிரஸ் வெற்றி பெறும். நிச்சயம் அங்கு ஆட்சியை கைப்பற்றும்.
கர்நாடகாவில் பாஜக பணத்தை கொட்டுகிறது. அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை கொண்டு சென்றுள்ளார். கர்நாடக அரசு 40 சதவீதம் கமிஷன் வாங்கும் அரசாக உள்ளாது. அங்கு காங்கிரஸ்க்கு ஆதரவான அலை இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களின் பிரச்சனைகள் தீரும்” எனக் கூறினார்.