நான் காங்கிரசில்தான் இருக்கிறேன்.. ஆனால் பா.ஜ.க. அரசை ஆதரிப்பேன்.. அசாம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. உறுதி

 
சஷி கந்த தாஸ் (நடுவில்)

அசாமில் பா.ஜ.க. தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளிப்பேன் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் உறுதியளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் ரஹா சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸை சேர்ந்த சஷி கந்த தாஸ். இவர் அசாமில் பா.ஜ.க. தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளார். இது காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிமாந்தா பிஸ்வா சர்மா

காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஷி கந்த தாஸ் நேற்று முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறுகையில், நான் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவை எனது தொகுதி தொடர்பான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக சந்தித்தேன். நான் இன்னும் காங்கிரஸில் உறுப்பினராக இருக்கிறேன். மாநில முதல்வரை சந்திப்பதால் பா.ஜ.க.வில் இணைவேன் என்று அர்த்தமில்லை. எனது தொகுதியில் வளர்ச்சி வேண்டும் என்பதற்காகவே அவரை சந்தித்தேன்.

காங்கிரஸ்

எதிர்க்கட்சியாக இருப்பதால் நான் முதல்வரை சந்திக்க எந்த விதியும் தடையில்லை என்று தெரிவித்தார். முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி பார்வையால் தூண்டப்பட்டு, காங்கிரஸ் கட்சியின் ராஹாவின் எம்.எல்.ஏ. ஸ்ரீ சஷி கந்த தாஸ், அசாம் அரசை அரசியல் ரீதியாக ஆதரிப்பதாக உறுதியளித்துள்ளார். இது முன்னுதாரணமானது  மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்தும். இந்த முடிவை நானும் அசாம் பா.ஜ.க. தலைவர் பாபேஷ் கலிதாவும் பாராட்டுகிறோம் என்று பதிவு செய்து இருந்தார்.