அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.. ஒரே வாரத்தில் 2 முறை கட்சி மாறிய பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ..

 
காங்கிரஸ்

பஞ்சாபில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஒரே வாரத்துக்குள் 2 முறை கட்சி மாறிய சம்பவம் வைரலாகி வருகிறது.

பொதுவாக தேர்தல் சமயத்தில் பலர் ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவது வழக்கான நிகழ்வுதான். ஆனால் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களை உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் ஆனால் அடுத்த 7வது நாளில் மீண்டும் காங்கிரஸில் இணைந்த சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. 

பல்விந்தர் சிங் லட்டி (நடுவில் இருப்பவர்)

பஞ்சாப் மாநிலம் ஹர்கோபிந்த்பூர் சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  பல்விந்தர் சிங் லட்டி. இவர் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத வண்ணம் காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை நேற்று முன்தினம் இரவு திடீரென தாய் கட்சியான காங்கிரஸில் மீண்டும் இணைந்தார். பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி மற்றும் துணை முதல்வர் சுக்ஜிந்தர் ரந்தாவா ஆகியோர் முன்னிலையில் பல்விந்தர் சிங் லட்டி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

பா.ஜ.க.

அண்மையில் காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான பிரதாப் பஜ்வாவின் சகோதரரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பஜே ஜங் சிங் பஜ்வா அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தார். எதிர்வரும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. கேப்டன் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.