ஜின்னாவை பா.ஜ.க.வினர்தான் அதிகம் புகழ்ந்து உள்ளனர்.. ஆதாரத்துடன் போட்டு உடைத்த காங்கிரஸ்

 
பா.ஜ.க.

அகிலேஷ் யாதவ் ஜின்னாவை புகழ்ந்தது இல்லை ஆனால்  ஜின்னாவை பா.ஜ.க.வினர்தான் அதிகம்  புகழ்ந்து உள்ளனர் என்று காங்கிரசின் ரஷித் அல்வி குற்றம் சாட்டினார்

உத்தர பிரதேசம் அசம்கரில் நடந்த  பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில்,  நாங்கள் JAM கொண்டு வந்தோம். J என்றால் ஜன்தன் கணக்கு , A என்றால் ஆதார் கார்டு, M என்றால் மொபைல் போன். இப்போது சமாஜ்வாடியும் JAM கொண்டு வந்துள்ளது. சமாஜ்வாடியின் J என்றால் ஜின்னா, A என்றால் அசாம் கான், M என்றால் முக்தர். உத்தர பிரதேச வளர்ச்சியை அவர்கள் (சமாஜ்வாடி) விரும்பவில்லை.  சாதிவெறி, கலவரம், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் வாக்கு வங்கி அரசியலால் சமூகத்தை பிளவுப்படுத்துவதை மட்டுமே அவர்கள் நம்புகிறார்கள். 

அமித் ஷா


தேர்தல் நெருங்கும் நேரத்தில் அகிலேஷ், யாதவ் ஜின்னாவை சிறந்த மனிதராக பார்க்கிறார். ஜின்னாவில் நீங்கள் சிறந்த நபரை நீங்கள் காண்கிறீர்களா? என்று நான் சிறுபான்மையினரிடம் கேட்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அகிலேஷ் யாதவ் ஜின்னாவை சிறந்த மனிதராக பார்க்கிறார் என்று அமித் ஷா கூறியதற்கு, ஜின்னாவை பா.ஜ.க.வினர்தான் அதிகம்  புகழ்ந்து உள்ளனர் என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முக்கிய காரணம் ஜின்னா என்று கூறப்படுகிறது.

ரஷித் அல்வி

காங்கிரஸ் மூத்த தலைவர் ரஷித் அல்வி கூறுகையில், ஜின்னாவை பற்றி சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் இது போன்ற எந்த அறிக்கையும் கூறியதாக நான் கேட்டதில்லை.  அமித் ஷா இந்த விஷயங்களை திருத்தி பேசுகிறார். பா.ஜ.க.வின் மறைந்த ஜஸ்வந்த் சிங் தனது புத்தகங்களின் ஒன்றில் ஜின்னாவை மதச்சார்பற்ற தலைவர் என்று குறிப்பிட்டுள்ளார். எல்.கே. அத்வானி, ஜின்னாவின் கல்லறைக்கு செல்வது வழக்கம் என்று தெரிவித்தார்.