கட்சி கொள்கைக்கு உடன்படவில்லை என்றால் கட்சியில் இருக்கமாட்டார்.. சசி தரூருக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ்
கட்சியின் கொள்கைக்கு உடன்படவில்லை என்றால் கட்சியில் இருக்கமாட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு கேரள காங்கிரஸ் தலைவர் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் அம்மாநிலத்தின் ஒரு முறையை மற்றொரு முனையை இணைக்கும் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் ரூ.63,941 கோடி செலவில் 532 கி.மீட்டர் தொலைவுக்கு அதிவேக ரயில் பாதை அமைக்கும் திட்டமான கே-ரயில் சில்வர் லைன் திட்டத்தை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு முன்வைத்துள்ளது. இந்த திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், திட்டத்துக்கு அதிக தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறி இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும், இடதுசாரி தலைமையிலான அரசின் கே ரயில் திட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் மனுவில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கையெழுத்திடவில்லை. இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று சசி தரூர் கூறியதாக தகவல். இது கேரள காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் அதிருப்தி மற்றும் கோபத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் கட்சியின் கொள்கைக்கு உடன்படவில்லை என்றால் கட்சியில் இருக்க மாட்டார் என்று சசி தரூருக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சசி தரூர் கட்சியில் தனி நபர். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் கருத்துக்கு உரிமை உண்டு. அவர் (சசி தரூர்) கட்சி கொள்கைக்கு உடன்பட்டால் கட்சியில் தொடர்வார். கட்சி கொள்கைக்கு உடன்படவில்லை என்றால் கட்சியில் இருக்கமாட்டார். அவ்வளவுதான். சசி தரூராக இருந்தாலும் சரி, கே.சுதாகரனாக இருந்தாலும் சரி, கட்சி முடிவுகளை எதிர்க்கும் உரிமையை கட்சி எம்.பி.க்களுக்கு யாரும் வழங்கவில்லை. ஒரு சசி தரூர் காங்கிரஸ் அல்ல.


