நாட்டுக்கு முதல் பெண் பிரதமரை வழங்கியது காங்கிரஸ்.. பிரியங்கா காந்தி
நாட்டுக்கு முதல் பெண் பிரதமரை வழங்கியது காங்கிரஸ் என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் மிகவும் தீவிரமாக உள்ளது. உத்தர பிரதேச பெண் வாக்காளர்களை கவரும் நோக்கில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கென தனியாக மகளிர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லக்னோவில் நேற்று காங்கிரஸ் மகளிர் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பிரியங்கா காந்தி பேசியதாவது:

பெண்கள் உண்மையிலேயே அரசியலின் ஒரு பகுதியாக இருந்தால், அது காகிதத்தில் அல்ல, களத்தில் மொழிபெயர்க்கப்படும். நாங்கள் பெண்களுக்கு 40 சதவீதம் பிரநிதித்துவத்தை ( உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட) வழங்கினோம், அவர்களின் அதிகாரம் காகிதத்தில் மட்டும் நின்றுவிடக் கூடாது என்பதற்காக. நாட்டுக்கு முதல் பெண் பிரதமரை (இந்திரா காந்தி) வழங்கியது காங்கிரஸ். காங்கிரஸின் சுசேதா கிருபலானி முதல் பெண் முதல்வர். மற்ற நாடுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிக குறைவாக இருந்தபோது நமது நாட்டில் முதல் பெண் பிரதமர் இருந்தார்.

நாங்கள் மகளிர் தேர்தல் அறிக்கையை தயாரித்தோம், அங்கு நாங்கள் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க விரும்புகிறோம் என்று கூற விரும்புகிறோம். பெண்கள் தங்களின் கருத்துக்களால் சங்கிலிகளை உடைக்கக்கூடிய சூழலை நாம் உருவாக்க வேண்டும். அங்கு அவர்கள் அரசியலில் முழுபங்களிப்பையும், சமூகததில் பங்கேற்பதன் மூலம் அவர்களின் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


