அதிமுகவில் குழப்பம்- இடைத்தேர்தலில் போட்டியிட யாரும் தயாராக இல்லை! ஈபிஎஸ் அப்செட்

 
eps

2026 தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை. விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சி அமைத்துள்ளது.

அதிமுகவில் இடையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்கிய எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். ஏற்கனவே இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், தனது திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதை அடுத்து மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளையும் தவெகவே கைப்பற்றியது. தற்போது திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, பெருந்துறை ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி டிசம்பரில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கலுக்குள் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தவெக சார்பில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளனர்.

- கரூர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்
- விராலிமலை - சி. விஜயபாஸ்கர்
- பெருந்துறை - ஜெயக்குமார்
- அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா

திருச்சி கிழக்கு தொகுதிக்கு மட்டும் விஜய் மிக கவனமாக வேட்பாளரை தேர்வு செய்து வருகிறாராம். தான் வென்ற தொகுதி என்பதால், தமிழகம் அறிந்த முகமாக இருந்தால் வெற்றி எளிது என்று கணக்கு போடுகிறாராம். சீமான் வழக்கம்போல் தனித்தே களமிறங்குகிறார். பொது வேட்பாளர் பேச்சுக்கே இடமில்லை என அதிமுக தெரிவித்துவிட்டதால், நாதகவில் பெயருக்கு வேட்பாளர்கள் களமிறங்குவார்கள் என்கின்றனர். அம்பாசமுத்திரத்தில் சீமான் போட்டியிடுகிறார். திமுகவில் அதிகாரப்பூர்வமாக தேர்தல் வேலைகள் தொடங்காவிட்டாலும், பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. வேட்பாளரை அறிவிப்பது மட்டும்தான் மிச்சம் என்கின்றனர் உடன்பிறப்புகள்.

ஆனால் அதிமுக நிலையோ கவலைக்கிடமாக உள்ளது. காரணம்  அந்த தொகுதிகளில் கோலோச்சி வந்தவர்கள் தற்போது தவெகவில் இணைந்து மீண்டும் போட்டியிட இருக்கின்றனர். அவர்களை தாண்டி இரண்டாம் கட்ட தலைவர்கள் தங்களுக்கு பதவி கிடைத்தால் போதும் நினைக்கின்றனர். தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லையாம். சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் தருவதில்லை. பூத் கமிட்டி, பிரச்சார செலவுகளுக்கு கூட கைக்காசை போட்டு தான் செலவு செய்ய வேண்டிய நிலை இருக்கிறதாம். தலைமையும் கடந்த தேர்தலில் பெரிய அளவில் உதவவில்லை. இதனால் ரத்தத்தின் ரத்தங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டவில்லையாம். அதே நேரத்தில் வேட்பாளரை களமிறக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தால், தனக்கு நெருக்கமானவர்களை தேர்தலில் நிற்க வைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருகிறார் என்கின்றனர்.