முதல் பாலிலேயே சிக்சர்- விஜய் காட்டிய அரசியல் வியூகம்
அரசியலில் சில தருணங்கள் ஒரே நாளில் ஒரு தலைவரின் முகவரியை மாற்றிவிடும். அப்படிப்பட்ட தருணமாகவே இன்று விஜயின் அரசியல் நகர்வு பார்க்கப்படுகிறது. பல திசைகளிலிருந்தும் வந்த அரசியல் நெருக்கடிகள், விமர்சனங்கள், சந்தேகங்கள் இவற்றையெல்லாம் தாண்டி தனது முதல் பெரிய அரசியல் சோதனையிலேயே விஜய் “முதல் பாலிலேயே சிக்சர்” அடித்துள்ளார் என்ற கருத்து மக்களிடையே வலுவாக உருவாகியள்ளது.
பாஜக, அதிமுக, திமுக மூன்று பெரிய அரசியல் சக்திகளின் அழுத்தங்களும் ஒரே நேரத்தில் இருந்த சூழலில், பலர் விஜயின் அடுத்த நகர்வை சந்தேகத்தோடு பார்த்தனர். “அரசியல் அனுபவம் குறைவு”, “இந்த நெருக்கடியை சமாளிக்க முடியுமா?” என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால் அதற்கான பதிலை அவர் செயலால் கொடுத்துள்ளார் என்ற பார்வை உருவாகியுள்ளது. அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறி, பல கட்சிகளின் ஆதரவைப் பெற்று, குறிப்பாக மதச்சார்பின்மை அடிப்படையிலான ஒரு கூட்டணியை அமைத்துக் காட்டியிருப்பது அவரது அரசியல் திறனை வெளிப்படுத்துவதாக ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இது வெறும் கூட்டணி அமைப்பு மட்டுமல்ல கடினமான சூழலிலும் அமைதியாக இருந்து, சரியான தருணத்தில் சரியான நகர்வு எடுக்கும் திறன் இருப்பதை காட்டும் அரசியல் செய்தி.
கடந்த இரண்டு நாட்களாக அவர் எதிர்கொண்ட அழுத்தங்கள் சாதாரணமானவை அல்ல. அரசியல் விமர்சனங்கள், எதிர்ப்புகள், கணிப்புகள் இவற்றின் மத்தியில் தளராமல் இருந்து, தனது நோக்கை அடைந்திருப்பது அவரது மனவலிமையையும் வெளிப்படுத்துகிறது. இதனால் “எந்த கடினமான சூழலையும் தாங்கி, அதிலிருந்து வெற்றி பெறக்கூடிய தலைவர்” என்ற புதிய பிம்பம் மக்களிடையே வலுப்பெற வாய்ப்பு உள்ளது. விஜய் ஏற்கனவே சில தருணங்களில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாலும், இந்தச் சூழல் அவரை ஒரு வேறு மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ஒரு நடிகராக இருந்தவர் அரசியல்வாதியாக மாறுவது ஒரு விஷயம் ஆனால் அரசியல் வியூக நிபுணராக தன்னை நிரூபிப்பது முற்றிலும் வேறு விஷயம். அந்த திசையில் இந்த நகர்வு அவருக்கு பெரிய மதிப்பெண் சேர்த்திருக்கிறது. அரசியல் என்பது வெறும் பேச்சின் மேடை அல்ல சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கும் கலை. அந்தக் கலையில் விஜய் இன்று தனது திறமையை காட்டியுள்ளார் என மக்கள் நம்புகின்றனர். “அரசியல் அறிவு கூர்மை”, “சிறந்த ஸ்ட்ராட்டஜிஸ்ட்”, “வேகமான அரசியல் கணிப்பு கொண்ட தலைவர்” என்ற அடையாளங்கள் அவரைச் சுற்றி உருவாகத் தொடங்கியுள்ளன. தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகளை தன் வசம் இழுத்தது விஜயின் தொடக்க அரசியலாகவே பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த தொடக்கம் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்த காரணத்தால் தவெகவின் ஆதரவு 116 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தவெக ஆட்சியமைக்க மேலும் 2 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை. இந்தச் சூழலில், 2 உறுப்பினர்களை கொண்ட விசிக இன்று மாலை தங்களின் முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளது. முதல் பெரிய அரசியல் சோதனையிலேயே “முதல் பாலிலேயே சிக்சர்” அடித்த தலைவராக விஜய் இன்று பேசப்படுகிறார்.

