எடப்பாடி கார் முற்றுகை; செருப்பு வீச்சு - டிடிவி தினகரன் மீது புகார்!
முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்காக மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோர் அனுமதி பெற்றனர். அதன்படி முதலில் அதிமுகவினரும் அவர்கள் பின்னால் அமமுகவினரும் அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதி கொடுத்தனர்.
திட்டமிட்டபடி எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் நினைவிடத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த அமமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு வரை விவகாரம் செல்ல எடப்பாடி காரை அமமுகவினர் முற்றுகையிட்டனர். மேலும் அவர் காரின் மீது செருப்பையும் கழட்டி வீசினார். இதனால் பதற்றம் நிலவியது. உடனடியாக போலீஸார் தலையிட்டு இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே திமுக அரசு இவ்வாறு சதி செய்துள்ளது என்றார். அதிமுகவினர் வெளியே வருவதற்கு முன்பே போலீஸார் அமமுகவினரை அனுமதித்தது ஏன் என்றும் கேள்வியெழுப்பினார். இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. காரை மறிக்க தூண்டியதாக டிடிவி தினகரன் மீதும் தாக்கியதற்காக அமமுகவினர் 100 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரப்பட்டது. அதன்பேரில் அமமுகவினர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.