நாம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணியா? புஸ்ஸி ஆனந்த் பதில்

 
புஸ்ஸி ஆனந்த்

2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியா? என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

புஸ்ஸி ஆனந்த்

உலக பட்டினி தினம் முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் மாநிலத் தலைவர் நடிகர் விஜயின் அறிவுறுத்தலின்படி, சென்னை திருவான்மியூரில் உள்ள தென்சென்னை தெற்கு மாவட்ட த.வெ.க சார்பில் தாமு என்பவர் சமபந்தி விருந்து ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு உணவருந்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஊக்கத் தொகை வழங்கினார். அதேபோல், இந்த ஆண்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்வோம். 2026 நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து போட்டியிடுமா என்பது குறித்து, கட்சித் தலைவர்தான் முடிவெடுப்பார். அவர் தான் அறிவிப்பார்” என்றார்.