நீங்கள் என்ன குற்றம் செய்தாலும், உங்க கழுத்தில் காவி துண்டு இருந்தால் உங்களை காப்பாற்ற பா.ஜ.க. வரும்.. பிருந்தா காரத்

 
காவி துண்டு

நீங்கள் என்ன குற்றம் செய்தாலும் உங்கள் கழுத்தில் காவி துண்டு இருந்தால் உங்களை காப்பாற பா.ஜ.க. வரும் என்று பிருந்தா காரத் குற்றம் சாட்டினார்.

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கடந்த சில தினங்களுக்கு முன் பிரபல சாமியார் காளிசரண் மகாராஜ் கைது செய்யப்பட்டார். சாமியார் காளிசரண் கைது குறித்து பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜயவர்கியா கூறுகையில், சாமியார்கள் உள்பட ஒவ்வொரு குடிமகனும் தகுந்த வார்த்தைககளை பயன்படுத்த வேண்டும். மத தலைவர்களிடம் சற்று தாராள மனப்பான்மை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளியான அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பா.ஜ.க.

அப்போது நாடு துண்டு துண்டாக இருக்கும் போன்ற தேசவிரோத முழக்கங்களை எழுப்பினர். தேசவிரோத முழக்கங்களை எழுப்பியதற்காக உமர் காலித் உள்ளிட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து,  ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் இடதுசாரி தலைவர்கள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்து சென்று மாணவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர், அவர்களின் முதுகில் தட்டி கொடுத்தனர். அப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று விஜயவர்கியா கேள்வி எழுப்பினார்.

பிருந்தா காரத்

இந்நிலையில் சாமியார் காளிசரண் மகாராஜ்க்கு ஆதரவாக கைலாஷ் விஜயவர்கியா பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிருந்தா காரத் கடும் கண்டம் தெரிவித்தார். இது தொடர்பாக பிருந்தா காரத் கூறியதாவது: காந்திஜியின் கொலையாளிகளை பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் போற்றுவது தெளிவான உண்மை, அவர்களை பாதுகாக்க தலைவர்கள் கேடயத்தை பயன்படுத்துவதான் இன்று நாட்டின் மிகப்பெரிய சோகம். இந்த காவி அனைத்து அரசியலமைப்பு விரோத, தேச விரோத சக்திகளையும் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. உங்கள் கழுத்தில் காவி துண்டு அணிந்து கொள்ளுங்கள், பின்னர் நீங்கள் சட்டத்திலிருந்து விடுபடுவீர்கள். நீங்கள் என்ன குற்றம் செய்தாலும், கழுத்தில் காவி துண்டு போடுங்கள், உடனடியாக உங்களை காப்பாற்ற பா.ஜ.க. உடனே வரும். அதே செய்தி ஹரித்வாரில் முயற்சி செய்யப்படுகிறது, ராய்பூரில் செய்யப்பட்டது, இப்போது காஜிபாத்திலும் செய்யப்படுகிறது.