மகாராஷ்டிராவில் மேலவை உறுப்பினர் தேர்தலில் 6ல் 4 இடங்களை கைப்பற்றிய பா.ஜ.க.... அதிர்ச்சியில் சிவ சேனா கூட்டணி

 
பா.ஜ.க.

மகாராஷ்டிராவில் அண்மையில் நடைபெற்ற 6 மேலவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தலில் 4 பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. ஆளும் சிவ சேனா கூட்டணி 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மகாராஷ்டிராவில் 5 லோக்கல் தொகுதிகளிலிருந்து பி.எம்.சி. (2 இடங்கள்), கோலாப்பூர், நந்துர் பார்-துலே, நாக்பூர் மற்றும் அகோலா-புல்தானா-வாஷிம் ஆகிய  6 மேலவை இடங்களுக்கான தேர்தல் டிசம்பர் 10ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. இதில் பி.எம்.சி.யின் 2 இடங்களில் சிவ சேனா மற்றும் பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்

கோலாப்பூர் மற்றும்  நந்துர் பார்-துலே ஆகிய மேலவை இடங்களுக்கு முறையே காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே எஞ்சிய நாக்பூர் மற்றும் அகோலா-புல்தானா-வாஷிம் மேலவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. நாக்பூர் மேலவை உறுப்பினருக்கான தேர்தலில் மொத்தம் 554 வாக்குகள் பதிவான. அதில் பா.ஜ.க. வேட்பாளர் 362 வாக்குகள் பெற்று மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளரை தோற்கடித்தார்.

தேவேந்திர பட்னாவிஸ்

அகோலா-புல்தானா-வாஷிம் மேலவை உறுப்பினருக்கான தேர்தலில் பா.ஜ.க.வின் வசந்த் கண்டேல்வால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவ சேனா வேட்பாளர் கோபிகிஷன் பஜோரியாவை தோற்கடித்தார். மேலவை உறுப்பினருக்கான தேர்தலில் 6ல் 4 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது சிவ சேனா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த வெற்றி குறித்து பா.ஜக..வின் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,  3 கட்சிகள் இணைந்துள்ளதால் அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெறுவோம் என்ற மகா விகாஸ் அகாதி கூட்டணியின் கட்டுக்கதையை நாங்கள் முறியடித்துள்ளோம். இந்த வெற்றி எங்கள் எதிர்கால வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளது என்று நான் உணர்கிறேன் என்று தெரிவித்தார்.