திடீர் ட்விஸ்ட்...! சண்டிகரில் கடைசி நொடியில் மலர்ந்த தாமரை... ஆம் ஆத்மிக்கு "அல்வா" பார்சல்!
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. சண்டிகரை பொறுத்தவரை பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தலைநகராகச் செயல்படுகிறது. அதேபோல அங்கு சட்டப்பேரவை கிடையாது. மாநகராட்சி தான் நிர்வாகம் செய்கிறது. அந்த வகையில் அங்கு பாஜகவைச் சேர்ந்த ரவிகாந்த் சர்மா நகராட்சி மேயராக இருந்தார். சமீப நாட்கள் முன்னர் அங்கு 35 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. கடந்த 27ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் 14 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது.
12 வார்டுகளை தான் ஆளும் பாஜக பெற்றுள்ளது. மீதமுள்ள 9 இடங்களில் எட்டில் காங்கிரஸும் அகாலி தளம் 1 இடத்திலும் வெற்றிபெற்றன. பாஜக சார்பில் மேயராக இருந்த ரவி காந்த் சர்மா, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கடந்த தேர்தலில் பாஜக 20 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. எப்போதுமே சண்டிகரில் காங்கிரஸும் பாஜகவும் தான் மாறி மாறி மேயர் பதவியைக் கைப்பற்றும். ஆனால் ஆம் ஆத்மி முதன்முறையாக மேயரை கைப்பற்றுவதற்கான சூழல் அமைந்தது. பெரும்பான்மையான கவுன்சிலர்களைப் பெற்ற ஆம் ஆத்மி கட்சி தான் மேயர் பதவியைக் கைப்பற்றும் என அக்கட்சி தொண்டர்கள் குஷியில் இருந்தனர்.
ஆனால் எதிரே நிற்பது பாஜக என்பதை மறந்துவிட்டார்கள் போல. ஆம் இம்மாதிரியான சொற்ப அளவிலான தோல்வியை பாஜக என்றுமே நழுவவிடாது. எதையாவது செய்து வேறு கட்சியில் வெற்றிபெற்றவர்களை இழுத்துப்போட்டு வெற்றியை தன்வசமாக்கிவிடும். கடந்த காலங்களில் பல்வேறு மாநில தேர்தல்களில் தோல்விமுகத்தில் இருந்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதையே தான் சண்டிகர் மேயர் தேர்தலிலும் செய்திருக்கிறது. பெரும் முதலைகளைப் பார்த்த மேயர் தேர்தல் எனும் சுண்டெலியைப் பிடிப்பது அவ்வளவு கடினமான காரியம் அல்லவே.
வார்டு கவுன்சிலர்கள் ஒன்று கூடி இன்று மேயரை தேர்வு செய்தனர். ஆம் ஆத்மி கட்சி சார்பில் அஞ்சு கத்யால், பாஜக சார்பில் சரப்ஜித் கவுர் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்கினர். காங்கிரஸ் புறக்கணித்ததால் பாஜக-ஆம் ஆத்மிக்கே நேரடி போட்டியே நிலவியது. இச்சூழலில் தான் அடுத்தடுத்த ட்விஸ்ட்கள் அரங்கேறின. காங்கிரஸ் சார்பில் கவுன்சிலராக தேர்வான ஹர்பிரீத் கவுர் திடீரென பாப்லா பாஜகவில் இணைய, பாஜகவின் பலம் 13ஆக உயர்ந்தது. அடுத்த ட்விஸ்ட்டாக பழைய ரூல் ஒன்று தூசி தட்டப்பட்டது. அதன்படி சண்டிகர் எம்பியாக இருப்பவர் மாநகராட்சியில் ஏற்கெனவே உத்தியோகபூர்வ உறுப்பினராக இருந்தால், அவர் வாக்களிக்கலாம் என்ற விதி தான் அது.
அதன்படி பாஜக எம்பி கிரென் கெர் வாக்களித்தார். இதனால் பாஜகவின் வாக்கு எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது. வாக்கு எண்ணிக்கைப்படி இரு கட்சிகளும் தலா 14 வாக்குகள் இருந்ததால் சமமான போட்டி நிலவியது. யார் ஜெயிப்பார் என நினைத்திருந்த வேளையில், ஆம் ஆத்மி கத்யாலுக்கு செலுத்தப்பட்ட 1 வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் பாஜகவின் தாமரை மீண்டும் மலர்ந்தது. பாஜகவின் சரப்ஜித் கவுர் மேயரானார். இதில் காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்திருந்தால் பாஜக தோற்றிருக்கும் என நினைக்கலாம். ஆனால் பஞ்சாப் தேர்தல் எதிர்வரும் நிலையில், ஆம் ஆத்மிக்கு சப்போர்ட் செய்தால் அக்கட்சி வலுப்பெற்றுவிடும்.
பாஜகவுக்கும் வாக்களிக்க முடியாது. எதுவுமே செய்ய முடியாத சூழலில் தான் மேயர் தேர்தலை புறக்கணித்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் கவுன்சிலரை தட்டி தூக்கி வெற்றியை உறுதிசெய்தது. இதன் மூலம் தன்னுடைய இமேஜையும் காப்பாற்றிக் கொண்டுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றிருப்பது பாஜகவுக்கு பூஸ்ட் கொடுத்தது போல அமைந்துள்ளது. இந்த வெற்றி பஞ்சாப்பிலும் எதிரொலிக்கும் என பாஜக எதிர்நோக்குகிறது. பஞ்சாப் சிங்குகள் பாஜகவை வரவேற்பார்களா அல்லது அடித்து அனுப்புவார்களா என நாமும் எதிர்பார்ப்போம். கடைசி நிமிட தோல்வி ஆம் ஆத்மியை உருக்குலைத்துள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. இதனால் தொண்டர்களும் கவுன்சிலர்களும் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.