“திருமா, கே.பாலகிருஷ்ணனுக்கு மிரட்டல்... 2026ல் திமுக கூட்டணி நிச்சயம் உடையும்”- தமிழிசை
பாஜக சார்பில் சென்னை கிழக்கு மாவட்டம் பெருங்குடி வேம்புலி அம்மன் கோவில் முன்பு தமிழர் திருநாள் பொங்கல் விழா முன்னிட்டு பொங்கல் வைத்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பங்கேற்று பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்து அருகில் உள்ள மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்து பெண்கள் பொங்கும் பொங்கலாக தான் இந்த பொங்கல் பொங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகை கொடுக்கப்படும், இந்தாண்டு கொடுக்கப்படவில்லை. பாரதிய ஜனதா கட்சி பெண்களை லட்சாதிபதியாக மாற்றி வருகிறது. பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வாழ்வியலில் முன்னேற வேண்டும். பேருந்து பயணத்தில் மட்டும் இலவசம் இருந்தால் வாழ்வியல் பயணத்தில் முன்னேற வேண்டும்.
கருத்து சுதந்திரம் எதிர்க்கட்சி குரல்களை தான் நெறிக்கப்பட்டது. தற்போது கூட்டணி கட்சி குரல்களும் நெறிக்கப்படுகிறது. திருமாவளவன் ஒரு கூட்டத்திற்கு செல்ல நினைத்தால் அவரை அழைத்து மிரட்டுகிறார்கள், அதேபோல் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் கருத்துக்கும் மிரட்டல் வருகிறது. கூட்டணி கட்சிகளை ஆட்சி பல தவறுகளை செய்கிறது என்று நினைக்கிறார்கள். 2026 இல் திமுக கூட்டணி நிச்சயம் பிரிந்து போகும். இந்த கூட்டணி அப்படியே இருக்காது என்பது என் கருத்து. யாராக இருந்தாலும் சரி எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட்டணி கட்சியாக இருந்தாலும் கருத்து சொல்வதற்கு சுதந்திரம் உள்ளது. தமிழகத்தில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்பதும், அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதும் உறுதியாகிறது.
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக ஏற்கனேவே மக்கள் மன்றங்களில் குரல் எழுப்பி இருக்கிறோம். சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு சட்டமன்ற குழு தலைவர் முடிவு செய்வார். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உண்மையான விசாரணை நடப்பதை காவல்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். முறையான விசாரணை இல்லாததால் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மை வருகிறது” என்றார்.