பிரதமரின் பயண வழி குறித்த விவரங்களை கசிய விட்டது யார்?... பா.ஜ..க கேள்வி

 
அஸ்வனி சர்மா

பிரதமரின் பயண வழி குறித்த விவரங்களை கசிய விட்டது யார்? என்று பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பாதுகாப்பு குளறுபடி காரணமாக தனது பஞ்சாப் பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு டெல்லி சென்றார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.  இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் அஸ்வனி சர்மா தலைமையில் 6 பேர் கொண்ட பா.ஜ.க. குழு நேற்று அம்மாநில கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து குறிப்பாணை வழங்கினர்.

சாலையில் 20 நிமிடங்கள் நின்ற மோடி  வாகனம்

பஞ்சாப் பா.ஜ.க. தலைவர் அஸ்வனி சர்மா கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின்போது பாதுகாப்பு மீறல் விவகாரத்தில் பஞ்சாப் உள்துறை அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மற்றும் டி.ஜி.பி. ஆகியோரை இடைநீக்கம் செய்ய வேண்டும்.  பஞ்சாபில் பிரதமரை வரவேற்பதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. பிரதமரின் பயண வழி குறித்த விவரங்களை கசிய விட்டது யார்?.

சரண்ஜித் சிங் சன்னி

பிரதமருக்கான பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக விசாரிக்க, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியால் அமைக்கப்பட்ட  குழுவால் ஒருபோதும் எதையும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் அவர்தான் (சரண்ஜித் சிங் சன்னி) சசித்திட்டத்தின் தலைவர். இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக பிரதமரின் பெரோஸ்பூர் பயணத்தின்போது நடந்த தவறுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த பஞ்சாப் அரசு 2 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தது குறிப்பிடத்தக்கது.