இந்தித் திணிப்பை பாஜகவே எதிர்க்கும்.. தமிழகத்தின் நலன் சார்ந்தே யோசிப்போம்.. - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

 
அண்ணாமலை

இந்தியை வலுக்கட்டாயமாகத் திணித்தால் பா.ஜ.க. கட்டாயம் எதிர்க்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள அவர்,  வலுக்கட்டாயமாக இந்தியைத் திணிக்க பாஜக நினைக்கவில்லை,  ஆனால் சம்பந்தமே இல்லாமல் இதில் பா.ஜக. பெயரை இழுத்துவிடுகிறார்கள் என்று கூறினார்.  

 காங்கிரஸ்  கட்சி கொண்டுவந்த முதல் கல்விக்கொள்கையிலும், அதனைத் தொடர்ந்து  1986ல் கொண்டுவரப்பட்ட  இரண்டாவது கல்விக் கொள்கையிலும் இந்தி கட்டாயம் என இருந்தது என்றும், ஆனால் பாஜக இந்தித் திணிப்பு செய்கிறது என எங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது என்றும்  எங்கள் பக்கம் இதை விளக்கிச் சொல்ல ஆள் இல்லை என்பதால் இன்று அவரை அது அப்படியே நீடிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை

ஆனால் தற்போது பாஜக கொண்டுவந்துள்ள புதியக் கல்விக் கொள்கையில்  5ம் வகுப்பு வரை கண்டிப்பாக தாய்மொழியில் படிக்க வேண்டும். மேலும் 8ம் வகுப்பு வரை தாய் மொழியில் படிப்பது ஒரு வாய்ப்பாகத்  தரப்படுகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.  தொடர்ந்து  3 மொழி படியுங்கள் என்றும், , பிடித்த மொழியைப் படியுங்கள் என்றுதான் நாங்கள் சொல்கிறோம்,  இந்த புதிய சேதியக் கல்விக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல, ஆனால்  தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது திராவிட கட்சிகளே செய்யாத சாதனை என்றும், மேலும் தமிழகத்தில் 20%பேர் மொழிவாரியாக சிறுபான்மையினராக  இருப்பதாகவும் அவர் கூறினார்.  

“உங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும்” – அண்ணாமலை வழக்கில் ஹைகோர்ட் கருத்து!

கோயம்புத்தூர் பகுதியில் மலையாளமும், சென்னைப் பகுதியில் தெலுங்கும், ஓசூர் பக்கம் கன்னடமும் படிக்க வேண்டுமென விரும்புவதில் தவறில்லையே எனக் கேள்வியெழுப்பிய அண்ணாமலை,  இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயம் படிக்க வேண்டும் என்று சொன்னால் அதை நானும் எதிர்ப்பேன் என்று தெரிவித்தார். மேலும் பலரும் சொல்வதுபோல்,  இந்த புதிய கல்விக்கொள்கையில் சமஸ்கிருதத்திற்கு எந்த முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.. படிக்கக்கூடிய 22 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று, தமிழகத்தில் அது யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் படிக்காமலே விட்டுவிடலாம் என்றும் கூறினார்.  அனைத்து விஷயங்களிலும்   தமிழக நலன் சார்ந்தே பாஜக யோசிக்கிறது . முல்லைப் பெரியாறு, மேகேதாட்டு பிரசனைகளிலும் பாஜக  தமிழகத்தின் பக்கமே இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.