ஜார்க்கண்டில் காட்டாட்சி நடக்கிறது.. மாநிலத்தின் வளத்தை கொள்ளையடிப்பதுதான் முதல்வர் சோரனின் திட்டம்.. பா.ஜ.க.

 
பா.ஜ.க.

பா.ஜ.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் நக்சல்களால் தாக்கப்பட்டதை குறிப்பிட்டு, ஜார்க்கண்டில் காட்டாட்சி வந்து விட்டது என்று பா.ஜ.க.  குற்றம் சாட்டியுள்ளது.

ஜார்க்கண்டில் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்கிழமையன்று நடந்த பாராட்டு விழாவின்போது, பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. குருசரண் நாயக்கை  நக்சல்கள் தாக்கினர் மற்றும் அவரது மெய்காவலர்கள் இருவரை கழுத்து அறுத்து கொன்றனர். இது தவிர்த்து, சிம்தேகா மாவட்டத்தில் சப்ரிதீபா கிராமத்தை சேர்ந்த சஞ்சு பிரதான் என்ற நபர் அடித்து கொல்லப்பட்டு, அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.  இந்த சம்பவங்கள் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தீபக் பிரகாஷ்

இந்த சம்பவங்களை குறிப்பிட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டாட்சி நடைபெறுகிறது என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. பா.ஜ.க. எம்.பி. தீபக் பிரகாஷ் இது தொடர்பாக கூறியதாவது: ஜார்க்கண்டில் உள்ள ஹேமந்த் சோரன் அரசின்கீழ் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையில் கட்டுபாடு இல்லை. அவரது ஆட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கூட பாதுகாப்பாக இல்லை. பட்டப்பகலில் 2 பாதுகாவலர்கள் நக்சல்களால் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இதுவரை ஜார்க்கண்ட் அரசு குற்றவாளிகளை பிடிக்க தவறி  விட்டது.

பெண் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு… பா.ஜ.க. எம்.பி.யிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு ஹேமந்த் சோரன் வழக்கு

மாநில மக்களின் நலனுக்காக பாடுபட ஹேமந்த் சோரன் அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என்று நான் மீண்டும் கூறுகிறேன். ஆனால் அவரது முக்கிய செயல்திட்டம் தனது சொந்த மாநிலத்தின்  வளத்தை கொள்ளையடிப்பதாகும். சிம்டேகா மாவட்டத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. ஜார்க்கண்டில் காட்டாட்சி வந்து விட்டது. மாநில அரசு சுவரொட்டிகளிலும், பதாகைகளிலும் தனது முகம் பிரகாசமாக வைப்பதில் மாநில அரசு மும்முரமாக உள்ளது. மிகவும் சோகமான சம்பவம் நடந்துள்ளது ஆனாலும் மாநில அரசு அமைதியாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.