மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து.. காங்கிரஸ் அரசாங்கத்தால் முழு பஞ்சாப்பும் தலைகுனிந்து கொண்டிருக்கிறது... தருண் சுக்

 
தருண் சுக்

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் அரசாங்கத்தால் முழு பஞ்சாப்பும் இன்று தலைகுனிந்து கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க.வின் தருண் சுக் தெரிவித்தார்.

பிரதமர் மோடி நேற்று பஞ்சாப் பயணத்தை ரத்து செய்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் தருண் சுக் கூறியதாவது: பிரதமர் மோடியை பொதுக்கூட்டத்தில் பேச அனுமதிக்காதது சன்னி அரசுக்கு வெட்கப்பட வேண்டிய விஷயம். பிரதமரின் வருகைக்காக சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்துவது காங்கிரஸ் அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால்  முழு பஞ்சாபுமே இன்று அவமானத்தில் தலைகுனிந்து கொண்டிருக்கிறது. 

மோடி

பிரதமர் எப்போதும் விவசாயிகளின் நலனை பற்றியே சிந்தித்து வருகிறார். அவர்களுக்கு (விவசாயிகள்) உரிய மரியாதையுடன் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்தார்.  ஆனால் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தாளத்திற்கு ஆடுகிறார்கள். இவர்கள் இருவரின் மோசமான வடிவமைப்புகளுக்கு பஞ்சாப் விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நவ்ஜோத் சிங் சித்து

பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்று ரூ.42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். ஆனால் பிரதமர் மோடி செல்லும் பாதையில் பதிண்டா என்ற பகுதியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், மோடியின் பாதுகாப்பு கன்வாய் சுமார் 20 நிமிடங்கள் பாலத்தில் நின்றது. இதனையடுத்து பாதுகாப்பு குளறுபடி காரணமாக பிரதமர் மோடி தனது பயணத்தை ரத்து செய்து விட்டு டெல்லிக்கு திரும்பி சென்றார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.