காங்கிரஸில் தங்களது பெரிய தலைவர்களை இழிவுப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது.. பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டு

 
ஜூகல் தாக்கூர் ஜூகல் தாக்கூர்

குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை ஏற்றுக் கொண்டதை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சனம் செய்ததை குறிப்பிட்டு, காங்கிரஸில் தங்களது பெரிய தலைவர்களை இழிவுப்படுத்தும் முயற்சிகள் நடக்கிறது என்று பா.ஜ.க. எம்.பி. குற்றம் சாட்டினார்.

நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன்  விருது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத்துக்கு அறிவிக்கப்பட்டது. குலாம் நபி ஆசாத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் மறைமுகமாக குலாம் நபி ஆசாத்தை தாக்கி இருந்தார்.

குலாம் நபி ஆசாத்

மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பத்ம பூஷன் விருதை நிராகரித்தை குறிப்பிட்டு, ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில்,  அவர் செய்தது சரியானது. அவர் ஆசாத் (சுதந்திரம்) ஆக விரும்புகிறார், குலாம் (அடிமை) அல்ல என்று குறிப்பிட்டு இருந்தார். குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை ஏற்றுக் கொண்டதை கிண்டலடித்த ஜெய்ராம் ரமேஷை பா.ஜ.க. எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. ஜூகல் தாக்கூர் கூறியதாவது: காங்கிரஸின் சிந்தனை புலப்படுகிறது. இன்று பத்ம விருதுகளை எந்த நபருக்கோ அல்லது கட்சிக்கோ அல்ல, சமூகத்திற்காக உழைத்தவர்களுக்கும், தங்கள் வாழ்க்கையை  அர்ப்பணித்த மக்களுக்கும் வழங்குகிறோம்.

ஜெய்ராம் ரமேஷ்

இதுதான் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை. சொந்த கட்சியில் மூத்தவர்கள், காங்கிரஸூக்கு பல தசாப்தங்களாக சேவையாற்றியவர்கள், பொது மக்களுக்கு சேவை செய்தவர்களுக்கு பத்ம பூஷன் விருது வழங்கினால், அதில் அரசியலை கொண்டு வரக்கூடாது. ஆனால் காங்கிரஸின் எண்ணம் என்னவென்றால், தங்களின் பெரிய தலைவர்களை இழிவுபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.