நேரு வம்சத்தால் திருடப்பட்ட காந்தி என்ற குடும்பப் பெயர் பாரதத்தின் மிகப்பெரிய ஊழல்... பா.ஜ.க. தாக்கு

 
சி.டி.ரவி

நேரு வம்சத்தால் திருடப்பட்ட காந்தி என்ற குடும்பப் பெயர் பாரதத்தின் மிகப்பெரிய ஊழல் என்று காங்கிரஸ் தலைவர்களை பா.ஜ.க.வின் சி.டி. ரவி தாக்கினார்.


பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்திலை உரையாற்றுகையில், நேருவின் தலைமுறையை சேர்ந்தவர்கள் அவர் (நேரு) பெயரை  ஏன் குடும்பபெயராக வைத்துக் கொள்ளவில்லை (பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்ளவில்லை) என்பது எனக்கு புரியவில்லை. இதில் என்ன பயமும் அவமானமும் இருக்கிறது என்று சோனியா காந்தி குடும்பத்தை தாக்கி பேசியிருந்தார். மோடியின் பேச்சுக்கு பதிலடியாக காங்கிரஸின் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இந்தியாவின் கலாச்சாரம் தெரியாத, புரிந்து கொள்ளாத, பொறுப்புள்ள பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர்  இப்படித்தான் பேசுவார். தாய்வழி தாத்தாவின் குடும்ப பெயரை யார் பயன்படுத்துகிறார்கள்  என்று நாட்டில் உள்ள எந்த நபரிடமும் நீங்கள் கேட்கலாமா?.

இந்திரா காந்தி

இந்தியாவின் கலாச்சாரம் குறித்த அடிப்படை புரிதல் கூட அவருக்கு இல்லையென்றால் கடவுளால் மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என தெரிவித்தார். பொதுவாக தாய்வழி தாத்தாவின் குடும்பபெயரை பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் பிரியங்கா காந்தியின் மகன் பெயரை குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர்களை பா.ஜ.க.வினர்  கிண்டல் செய்துள்ளனர். பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி.டி. ரவி கூறுகையில், நேரு வம்சத்தால் திருடப்பட்ட காந்தி என்ற குடும்பப் பெயர் பாரதத்தின் மிகப்பெரிய ஊழல். இந்திரா பிரியதர்ஷினி இந்திரா காந்தியாக மாறியதற்காக தன் தந்தை நேருவை நினைத்து அவமானப்பட்டாரா?. தனது மகனுக்கு ரெஹான் ராஜீவ் காந்தி என்று பெயர் வைத்த பிரியங்கா காந்தி தனது கணவரின் பெயரை நினைத்து அவமானப்படுகிறாரா? என்று நேரு குடும்பத்தை கிண்டல் செய்து இருந்தார்.

ரெஹான் ராஜீவ் காந்தி, பிரியங்கா காந்தி

பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா டிவிட்டரில், பிரியங்கா வத்ராவின் மகன் ரெஹான் தனது பெயரை ரெஹான் ராஜீவ் காந்தி என்று எழுதினால் (அவரது தாய்வழி தாத்தாவின் பாரம்பரியத்தை அபகரிக்கும் முயற்சியில்), குடும்பத்தில் யாரும் நேரு குடும்பப் பெயரை ஏன் பயன்படுத்துவதில்லை? அவமானம் படுகிறீர்களா? என பதிவு செய்து இருந்தார்.