பாஜக இல்லையென்றால் இன்றைக்கு உள்ள அதிமுக என்ற கட்சியே இல்லை- ஹெச்.ராஜா

 
h.raja

பாஜக இல்லாவிட்டால் இன்றைக்கு உள்ள அதிமுக கட்சியே கிடையாது, தனித்தனியாக பிரிந்து கிடந்தவர்களை ஒன்று சேர்த்தவர்கள் நாங்கள்தான் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நெருக்கடி நிலை கால போராட்ட வீரர்கள் சங்கம் சார்பில் மிசா சிறை சென்ற தியாகிகளுக்கு பாராட்டு விழாவில் கலந்து கொள்ள பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா வருகை தந்தார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியுள்ளது. கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதும், பட்டாசு வெடித்து கொண்டாடியதும் பெரிய விசயமல்ல. அதைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை. பட்டாசு வெடிக்க 10 பேர் போதும், இந்த 2 திராவிட கட்சிகளும் இல்லாமல் நாங்கள் கூட்டணி அமைத்து தமிழகத்தில் 20 சதவீத வாக்குகள் பெற்றோம். அந்த தேர்தலில் திமுகவை விட 2 சதவீத வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்றோம். 


அதிமுக வெளியேறியதால் பாஜகவுக்கு நஷ்டம் இல்லை. இருந்தாலும் கூட்டணியில் இருந்து ஒரு நண்பர் செல்வதை ஐயோ பாவம் என்று பரிதாபப்படலாம். அதிமுக, திமுகவின் கடந்த காலம் சரியல்ல. இவர்களுடைய கடந்த காலம் தெரிந்துதான். இந்த கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டணி அமைத்திருந்தோம். பொது எதிரியின் வாக்குகள் சிதறாமல் இருக்கத்தான் கூட்டணி அமைக்கப்படுகிறது. கொள்கை ரீதியாக கூட்டணிக்கு சம்பந்தம் இல்லை. அதிமுக கூட்டணியால் பாஜகவுக்கு மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. கூட்டணியில் இருந்து அதிமுக சென்றது நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, இபிஎஸ் அதை போட்டுடைத்தான்டி என்று சொல்லும்படி உள்ளது. இதை அதிமுக தாமதமாக உணர்வார்கள், அது நடக்கும். 

நாங்கள் ஒட்டி வைக்காவிட்டால் அதிமுக நெல்லிக்காய் மூட்டை. அவர்கள் பெரிய சாதனை செய்ததாக நினைத்துக் கொள்ள வேண்டாம் மத்தியில் ஆளுங்கட்சியாக பாஜக உள்ளது. மாநிலத்தில் ஆளுங்கட்சியாக திமுக உள்ளது. அதிமுக எங்கே உள்ளது? அதிமுக இன்றோடு முடிந்தது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.