பாஜக இல்லாமல் அதிமுக செயல்பட முடியாது- சி.டி.ரவி
அண்ணாமலை தமிழகத்தில் சரியான பாதையில் அரசியல் செய்வதாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுகவின் பிரிந்த அணிகள் ஒருங்கிணைந்த அணியாக மாறும் என்று பாஜக மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த நிலையில், அதிமுகவின் பிரிந்த அணிகள் இனி இணைய வாய்ப்பே இல்லை என்பது போல் நாளுக்கு நாள் மோதல் உச்சகட்டத்தை சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் அதிமுக- பாஜகவுடனான கூட்டணியிலும் விரிசல் நீடிக்கிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன், தமிழ்நாட்டில் பாஜக வளர நினைப்பதாகவும் அண்ணாமலை கூறிவருகிறார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி, “பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியான பாதையில் அரசியல் செய்துகொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு அண்ணாமலை செய்யும் அரசியல்தான் சரியானது. அதிமுக உடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூறியிருப்பது பாஜகவுக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. அண்ணாமலை இதுபோன்ற கருத்துகளை கூறினால் மட்டுமே அதிமுகவினர், பாஜகவுடன் கூட்டணி வைக்க முன்வருவார்கள். ஏனெனில் அதிமுகவால் பாஜகவின் ஆதரவு இல்லாமல் செயல்பட முடியாது” எனக் கூறினார்.