சமாஜ்வாடி கட்சி ஒரு குடும்ப கட்சி.. அகிலேஷ் யாதவை தாக்கிய ஜே.பி. நட்டா

 
ஜே.பி. நட்டா

சமாஜ்வாடி கட்சி ஒரு குடும்ப கட்சி என்றும், தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயல்பட்டவர் என்று அகிலேஷ் யாதவ் மீது பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா குற்றம் சாட்டினார்.

உத்தர பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பா.ஜ.க.. சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கி விட்டன. பா.ஜ.க. மக்கள் நம்பிக்கை யாத்திரை என்ற பெயரில் அம்மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. லக்னோவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க.வின் மக்கள் நம்பிக்கை யாத்திரை நிகழ்ச்சியில் அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார். அந்த யாத்திரையில் ஜே.பி. நட்டா பேசியதாவது: 

ஹத்ராஸ் சென்ற ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மீது மை வீச்சு.. சமாஜ்வாடி கட்சி கண்டனம்

சமாஜ்வாடி கட்சி ஒரு குடும்ப கட்சி. அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இருந்தபோது 15 தீவிரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தார். ஆனால் நீதிமன்றம் அனுமதிக்கவில்லை. அவர்களில் 4 பேருக்கு மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதுதான் அகிலேஷ் யாதவின் உண்மையான முகம். வித்தியாசம் தெளிவாக உள்ளது. அகிலேஷ் யாதவின் ஆட்சி தவறான ஆட்சி (குஷாசன்), யோகி ஜி ஆட்சி  நல்லாட்சி (சுஷாசன்).

பிரியங்கா காந்தி

யோகி ஆதித்யநாத் எதிர்காலத்தை அழித்து விட்டார் என்ற அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டுக்கு, ஜே.பி. நட்டா,  சமாஜ்வாடி தலைவர் தனது சொந்த எதிர்காலத்தை குறிப்பிட்டு இருக்கலாம் என்று கிண்டலாக பதில் அளித்தார்.  மேலும், பிரியங்கா காந்தியின் நான் ஒரு பெண், என்னால் போட்டியிட முடியும் என்ற பிரச்சாரம் குறித்து நட்டா, 11 கோடி வீடுகளில் கழிப்பறை இல்லாத போது நீங்கள் எங்கே இருந்தீர்கள்? என்று பிரியங்கா காந்திக்கு கேள்வி எழுப்பினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.