ஓவைசி அவுரங்கசீப்பின் சந்ததி.. மோடியும், யோகி ஆதித்யநாத்தும் சிவாஜியைப் போன்றவர்கள்.. பா.ஜ.க. எம்.எல்.ஏ.

 
யோகி ஆதித்யநாத், மோடி

அசாதுதீன் ஓவைசி அவுரங்க சீப்பின் சந்ததி போன்றவர் என்று உத்தர பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரேந்திர சிங் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பைரியா சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பா.ஜ.க.வின் சுரேந்திர சிங். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதில் பெயர் போனவர். தற்போது அசாதுதீன் ஓவைசியை அவுரங்கசீப்பின் சந்ததி என்று கூறியுள்ளார். பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய இந்தியாவில் முகமது அலி ஜின்னாவின் கருத்தை அசாதுதீன் ஓவைசி பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அசாதுதீன் ஓவைசி அவுரங்க சீப்பின் சந்ததி போன்றவர்.  

சுரேந்திர சிங்

ஆனால் பிரதமர் மோடியும், யோகி ஆதித்யநாத்தும் சிவாஜியைப் போன்றவர்கள் என்பதையும் இந்த புதிய யுக அவுரங்கசீப்பிடமிருந்து மக்களை விடுவிக்க அவர்கள் அவதாரம் எடுத்திருக்கிறார்கள் என்பதையும் அவர் (அசாதுதீன் ஓவைசி) அறிந்திருக்க வேண்டும்.  வருமான வரித்துறையினர் ரெய்டில் சிக்கிய கான்பூர் தொழிலதிபர் பியூஸ் ஜெயின், சமாஜ்வாடி தலைவர்களின் குபேரர். 2022 உத்தர பிரதேசத்தில் தேர்தலில் பயன்படுத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பணம் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதால், சமாஜ்வாடி கட்சி தலைமை சூடாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ஒடிசா, மேற்கு வங்கத்தில் புயல் சேதத்துக்கு ரூ.1,500 கோடி போதாது… மத்திய அரசை குறை கூறும் ஓவைசி…
கடந்த காலத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், அசாதுதீன் ஓவைசி ஒரு அரசியல் தீவிரவாதி. சமூகத்தை தூண்டி உடைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என்று கூறியிருந்தார். உத்தர பிரதேசத்தில் 403 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்து இருந்தார். தற்போது அசாதுதீன் ஓவைசி அந்த மாநிலத்தில் தீவிரமாக பொதுக்கூட்டங்களில் கலந்து பேசி வருகிறார்.