விவசாயிகள் வீட்டுக்கு கிளம்பிட்டாங்க... ஆனால் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.. பூபேஷ் பாகல் எச்சரிக்கை

 
பூபேஷ் பாகல்

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் நிறுத்தி வைத்துள்ளனர், அவர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.


மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியின் பல எல்லைகளில் கடந்த ஒராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்தார். மேலும் நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. மேலும் பல விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தது. 

கூடாரங்களை அகற்றும் விவசாயிகள்

இதனையடுத்து நேற்று டெல்லியின் எல்லைகளில் முகாமிட்டு இருந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கினர். இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் முடியவில்லை, தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளனர் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறாமல் நிறுத்தி வைத்துள்ளனர். 

கொரோனா வைரஸ்

போராட்டம் முடிவுக்கு வரவில்லை.விவசாயிகள் முதலில் அரசின முன்மொழிவுகளை கவனிப்பார்கள். புதுவகை ஒமைக்ரான் கொரோனா வைரஸை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். அது (ஒமைக்ரான்) சத்தீஸ்கருக்கு வரக்கூடாது என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.