யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக களம் இறங்கும் பீர் ஆர்மி தலைவர்.. சூடு பிடிக்கும் கோரக்பூர் சதார் தொகுதி

 
சந்திரசேகர் ஆசாத்

எதிர்வரும் உத்தர பிரசேத சட்டப்பேரவை தேர்தலில் கோரக்பூர் சதார் தொகுதியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுவார் என்று ஆசாத் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.


பீம் ஆர்மியின் தலைவர் 34 வயதான சந்திர சேகர் ஆசாத். 2019ல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிட போவதாக சந்திரசேகர் ஆசாத் அறிவித்தார். இதனையடுத்து சந்திரசேகர் ஆசாத் மிகவும் பிரபலமானார். ஆனால் பின்பு மோடிக்கு எதிராக போட்டியிடும் முடிவிலிருந்து பின்வாங்கினார். தனக்கு கட்சி இல்லாததால், மாயாவதியின் கட்சியை ஆதரிப்பதே சிறந்தது என்று பின்னர் விளக்கம் அளித்தார்.

மோடி

அதன் பிறகு 2020 மார்ச் மாதத்தில் ஆசாத் சமாஜ் கட்சி என்ற கட்சியை சந்திரசேகர் ஆசாத் தொடங்கினார். எதிர்வரும் உத்தரபிரதேச தேர்தலில் ஆசாத் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார். இந்நிலையில், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான யோகி ஆதித்யநாத் போட்டியிடும்  கோரக்பூர் சதார் சட்டப்பேரவை தொகுதியில் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுவார் என்று  ஆசாத் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது.

யோகி

ஆசாத் சமாஜ் கட்சி சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபாசாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் மற்றும் கன்ஷிராம் சாஹிப் ஆகியோரின் சித்தாந்தத்தை முன்னோக்கி கொண்டு, ஆசாத் சமாஜ் கட்சி கோரக்பூர் சதார் தொகுதியில் சந்திர சேகர் ஆசாத்தை வேட்பாளராக அறிவித்துள்ளது. யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக சந்திரசேகர் ஆசாத் களம் இறங்குவதால் தற்போது அந்த தொகுதி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.