கோவிட் விதிமுறைகளை யார் மீறினாலும் சட்டப்படி ஒரே மாதிரி நடவடிக்கை.. கர்நாடக முதல்வர் எச்சரிக்கை

 
பவசராஜ் பொம்மை

கர்நாடகாவில் கோவிட்-19 விதிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி சீரான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை செய்தார்.

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: மாநிலத்தில் கோவிட்-19 விதிமுறைகளை யார் மீறினாலும், அது சாமானியராக இருந்தாலும் சரி, பெரிய தலைவராக இருந்தாலும் சரி,  எந்த வேறுபாடும் காட்டப்படாது. சட்டப்படி சீரான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாது பாதயாத்திரையில் பங்கேற்பவர்களின் உடல்நிலையில் அரசு அக்கறை கொண்டுள்ளது. நீண்ட நடைபயணத்தில் செல்பவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பது சுகாதாரத் துறையின் கடமை.

கோவிட் பரிசோதனை

சுகாதாரத் துறையின் கடமையை திறம்பட செய்ய பங்கேற்பாளர்கள் (நடைப்பயணத்தில் பங்கேற்றவர்கள்) ஒத்துழைக்க வேண்டும். மாநிலத்தில் நேற்று (நேற்று முன்தினம்) 12 ஆயிரம் கோவிட் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பெங்களூருவில் மட்டும் சுமார் 9 ஆயிரமாக உள்ளது. மாநிலத்தில் நேர்மறை விகிதம் 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் 10 சதவீதமாக உள்ளது. கோவிட் பாதிப்பில் நாட்டிலேயே கர்நாடகா 3வது இடத்தில் உள்ளது. எனவே அதிக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எப்.ஐ.ஆர்.

கர்நாடகாவில் மேகதாது குடிநீர் திட்டத்தை விரைவில் செயல்படுத்தக்கோரி காங்கிரஸ் 11 நாள் பாதயாத்திரையை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பாதயாத்திரையின்போது கோவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக, அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா உள்பட 30 பேர் மீது எப்.ஜ.ஆர். பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்துதான், கோவிட் விதிமுறைகளை யார் மீறினாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டியளித்துள்ளார்.