குற்றம் சாட்டுவதால் வைரஸ் ஒழிந்து விடாது. நான் இந்த குப்பையில் இறங்க மாட்டேன்.. பா.ஜ.க. அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி

 
அரவிந்த் கெஜ்ரிவால்

குற்றம் சாட்டுவதால் வைரஸ் ஒழிந்து விடாது. நான் இந்த குப்பையில் (குற்றம் சாட்டுவது)  இறங்க மாட்டேன் என்று ஹரியானா பா.ஜ.க. அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் டெல்லிக்கு அருகில் இருப்பதால தங்கள் மாநிலம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ஹரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் குற்றம் சாட்டினார். ஹரியானா அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது: ஹரியானாவில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 9 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.  அதில் 50 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்புகள் குருகிராம், பரிதாபாத் மற்றும் சோனிபட் ஆகிய இடங்களிலிருந்து வந்துள்ளன.

அனில் விஜ்

டெல்லியின் தொற்று விகிதம் மாநிலத்தில் (ஹரியானா) தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் தேவைக்கு ஏற்ப, நாங்கள் நிலைமையை சமாளித்து வருகிறோம். மாநிலத்தில் சுகாதார சேவைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். நோயாளிக்ள டெல்லி அல்லது வேறு எங்கிருந்து வந்தாலும், அவர்களுக்கு மாநிலத்தில் முழுமையான சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ்

ஹரியானா சுகாதாரத் துறை அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு, டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பதிலளிக்கையில், குற்றம் சாட்டுவதால் வைரஸ் ஒழிந்து விடாது. நான் இந்த குப்பையில் (குற்றம் சாட்டுவது) இறங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.