பா.ஜ.க.வை விடுங்க.. எங்க கட்சிக்கு வந்து போட்டியிடுங்க.. உத்பால் பாரிக்கருக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்
கோவாவில் பானாஜி தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தியில் இருக்கும் உத்பால் பாரிக்கருக்கு, எங்க கட்சியில் இணைந்து போட்டியிடுங்க என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
கோவாவில் 40 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க. 34 பேர் கொண்ட தனது வேட்பாளர்கள் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பானாஜி சட்டப்பேரவை தொகுதியில் அதனாசியோ பாபுஷ் மான்செரேட் என்ற நபரை பா.ஜ.க. நிறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு குற்ற வழக்குகள் உள்ள அதனாசியோ பாபுஷ் மான்செரேட்டை கட்சி நிறுத்த போவதாக அறிந்த மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால் அதனை பா.ஜ.க. கண்டுகொள்ளாமல் பானாஜி சட்டப்பேரவை தொகுதியில் அதனாசியோ பாபுஷ் மான்செரேட்டை நிறுத்தியுள்ளது. அதேசமயம் வேறு 2 தொகுதிகளை குறிப்பிட்டு இதில் ஏதாவது ஒன்றில் போட்டியிட உத்பால் பாரிக்கருக்கு பா.ஜ.க. வாய்ப்பு வழங்கியது. ஆனால் போட்டியிட்டால் பானாஜி தொகுதியில்தான் போட்டியிடுவேன் என்று அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டதாக தகவல். இதற்கிடையே உத்பால் பாரிக்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது நிலைப்பாட்டை விரைவில் தெளிவுப்படுத்துவேன் என்று தெரிவித்தார்.
இந்த சூழ்நிலையில், எங்க கட்சி வாங்க பானாஜி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தருகிறோம் என்று உத்பால் பாரிக்கருக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், கோவா பா.ஜக.. வேட்பாளர்கள் குறித்து செய்தி வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்து, பாரிக்கர் குடும்பத்துடன் கூட பா.ஜ.க. யூஸ் அண்ட் த்ரோ கொள்கையை கடைப்பிடித்ததை கோவா மக்கள் வருத்தம் கொள்கிறார்கள். மனோகர் பாரிக்கர் ஜியை நான் எப்போதும் மதிக்கிறேன். உத்பால் ஜி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது என்று பதிவு செய்துள்ளார்.