சண்டிகர் மாநகராட்சி தேர்தல்.. ஆம் ஆத்மியின் வெற்றி, பஞ்சாபில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளம்.. கெஜ்ரிவால்
சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி பஞ்சாபில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளம் என்று அந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
சண்டிகர் மாநகராட்சி தேர்தல் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. மொத்தமுள்ள 35 வார்டுகளில் ஆம் ஆத்மி அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின்படி, சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிகபட்சமாக 14 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

அதேவேளையில் பா.ஜ.க. 12 வார்டுகளுடன் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக சண்டிகர் மாநகராட்சி மேயராக இருந்த பா.ஜக.வின் ரவி கே சர்மா ஆம் ஆத்மி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். காங்கிரஸ் 8 வார்டுகளை கைப்பற்றியது. சிரோமணி அகாலி தளம் ஒரே ஒரு வார்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றி, பஞ்சாபில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சண்டிகர் மாநகராட்சி தேர்தல் வெற்றி குறித்து டிவிட்டரில், சண்டிகர் மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் இந்த வெற்றி பஞ்சாபில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் அடையாளம். சண்டிகர் மக்கள் இன்று ஊழல் அரசியலை நிராகரித்து ஆம் ஆத்மியின் நேர்மையான அரசியலை தேர்ந்தெடுத்துள்ளனர். வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த முறை பஞ்சாப் மாற்றத்துக்கு தயாராக உள்ளது என்று பதிவு செய்துள்ளார்.


